இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 டிசம்பர், 2010

ராஜபக்சவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு ...

ராஜபக்சவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு

  ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’என்று கூறி, நாடுகளுக்கு இடையே போர் நடந்தால் கூட பயன்படுத்தக் கூடாது என்று உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட கொத்துக் குண்டுகள், வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றை தன் நாட்டு மக்கள் மீது வீசி, இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்றொழித்த இனப் படுகொலை அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்த ஆண்டில் பல முனைகளில் தலைகுனிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
  

 2009 ஆம் ஆண்டு மே 16,17,18ஆம் தேதிகளில் மட்டும் 50 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து போரை முடித்த மகிந்த ராஜபக்சவுக்கு, உலகத்தை அதிர்ச்சியுறச் செய்த இந்த படுகொலையை தடையின்றி நடத்தி முடிக்க தனக்கு உதவிய தெற்காசிய வல்லரசுகளான இந்தியாவும், சீனாவும், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கி ஆதரவளித்த இரஷ்யாவும் அளிக்கும் ஆதரவு மட்டும் தன்னையும், தனது நாட்டையும் காத்திட போதுமானது அல்ல என்று உணரவைத்த ஆண்டு இது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை இழப்பு

  “உங்கள் நாட்டு மக்கள் மீது தொடுத்த யுத்தத்தில் நடந்த போர்க் குற்றங்களை முறையாக விசாரிக்க பன்னாட்டு விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, தங்களுடைய கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில், 6 மாத காலத்தில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி மீது விதிக்கப்படும் தீர்வைக்கு தாங்கள் அளித்துவரும் மானியத்தை நிறுத்துவோம் என்று அறிவித்தது. ஏனெனில், எந்த ஒரு மூன்றாம் உலக நாட்டிற்கும் இப்படிப்பட்ட இறக்குமதி தீர்வைச் சலுகை அளிப்பதற்கு ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளில் முக்கியமானது, அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே.



 
சிங்கள பேரினவாதம் என்பதைத் தவிர ஜனநாயகம் என்ற ஒன்றை மருந்திற்கும் அறியாத சிறிலங்க அரசியல்வாதிகளுக்கு, மனித உரிமை என்பது சிங்கள மக்கள் உரிமை என்பதைத் தவிர வேறு என்ன தெரியும்? எனவே எதிர்பார்த்தைப் போல் ஐரோப்பிய ஒன்றிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது என்று ராஜபக்ச மறுக்க, அந்நாட்டின் ஏற்றுமதிக்கு, குறிப்பாக ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு அளித்துவந்த தீர்வை மானியத்தை இரத்து செய்வதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்தது.

  இந்த முடிவை மேற்கொள்வதற்கு முன்னர், அது தொடர்பாக தன்னளவில் ஒரு பெரும் விசாரணையை நடத்தியது ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஆணையத்தின் வர்த்தக பேச்சாளர் கிரிஸ்டியன் ஹோமான் இவ்வாறு கூறினார்; “இலங்கையில் நிலவும் மனித உரிமை சூழல் குறித்து விரிவாக புலனாய்வு செய்தோம். குறிப்பாக, ஜி.எஸ்.பி.+ வரிச் சலுகையை பெறுவதற்கு அடிப்படையான பன்னாட்டு மனித உரிமை தரங்களை மதிப்பது என்று அளித்த உறுதிமொழியை சிறிலங்க அரசு பாதுகாக்கிறதா என்று பார்த்தோம். சிறிலங்க அரசு இந்த விடயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளதையே விசாரணை அறிக்கை காட்டுகிறது” என்று தெளிவாக விளக்கிய பிறகே இறுதி அறிவிப்பை வெளியிட்டது.

  இலங்கைக்கு ஆண்டிற்கு சராசரியாக 3.47 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அந்நியச் செலாவணியை கொண்டு வருவது ஆயத்த ஆடை ஏற்றுமதியே. இதற்கு அடுத்த இடத்தில் 1.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு தேயிலை ஏற்றுமதி இருக்கிறது. இவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் தீர்வை மானியம் மட்டும் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல்! இதனை இழந்துள்ளதால் ஏற்றுமதியை இழந்துள்ளது இலங்கை.

  இன்றைக்கு அந்நாட்டின் வர்த்தகப் பேரவையின் தலைவர், ஏற்றுமதியை அதிகரிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த நிலை நீடித்தால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

  ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியபோது, எங்களுடைய நடவடிக்கையின் மீது வினா எழுப்ப இவர்கள் யார் என்று திமிராக கேட்ட சிறிலங்க அரசியல்வாதிகள், இப்போது ‘எங்களுக்கு பதில் அளிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற வாசலில் குனிந்து கொண்டு கோரிக்கை விடுக்கிறார்கள்!

தமிழக மக்கள் முறியடித்த ஐஃபா விழா 

   உலகமே போர்க் குற்றவாளி என்று விரல் நீட்டி குற்றஞ்சாட்டி வந்த நிலையிலும் வாரியணைத்து வாழ்த்திட அருகே இந்தியா இருக்க கவலை ஏன்? என்று இருமாந்திருந்த அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது நாட்டை அமைதிப் பூமியாக காட்டவும், அதன் மூலம் இழந்து தொங்கிக் கிடக்கும் தனது நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த சுற்றுலாவைப் பெருக்கவும் திட்டமிட்டு, மும்பையின் திரை நட்சத்திரங்களை வைத்து ஒரு பெரும் விழாவை நடத்தி உலகத்தின் பார்வை திசை திருப்ப முயன்றார். அதுவே இந்தியா சர்வதேச திரைப்பட விழா-ஐஃபா (India International Film Festival - IIFA) .

  இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவரும் அமிதாப் பச்சனை ஐஃபா விழாவின் தூதராக வைத்து அவர் ஆட முற்பட்ட பன்னாட்டு ஏமாற்று நாடகத்தை உரிய நேரத்தில் உணர்ந்த தமிழ் உணர்வாளர்கள், அதற்கு எதிரான ஒரு பெரும் பிரச்சார திட்டத்தை உருவாக்கி, சென்னையிலும், மும்பையிலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்த அமிதாப்பும், அவருடைய மகன் அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராயும் ஐஃபா விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள திரையுலகத்தினரும் புறக்கணித்தனர். ஐஃபா விழாவில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் தென்னாட்டில் திரையிட அனுமதிக்க முடியாது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவிக்க, சில இந்தி நடிகர், நடிகைகளின் துணையுடன் நடந்த ஐஃபா விழா படுதோல்வியில் முடிந்தது.அது மட்டுமல்ல, அந்த விழாவை ஒட்டி, இந்தியாவின் தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் முழு ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட உலக வர்த்தக மாநாடும் தோல்வியில் முடிந்தது. இது சிறிலங்க அரசிற்கு அவமானத்தையும், பெரும் நிதியிழப்பையும் ஏற்படுத்தியது மட்டமின்றி, தமிழ்நாட்டின் எதிர்ப்பு எத்தனை வலிமையானது என்பதை சிறிலங்க அரசுத் தலைமைக்கு உணர்த்தியது.

ஐ.நா.அவையில் கேட்பதற்கு யாருமில்லை

  ஆனாலும் தனது பெருமையை இந்திய, சீன எல்லையைத் தாண்டி நிலைநாட்டுவதில் முனைப்பாக இருந்த மகிந்த ராஜபக்ச, ஐ.நா.அவையில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மிகுந்த பிரயாசையுடன் நியூ யார்க்கிற்குப் புறப்பட்டார். அன்றைய தினம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசிய பிறகு ராஜபக்ச பேச வேண்டும். ஒபாமா பேசியபோது உலக நாடுகளின் தூதர்கள் அனைவரும் அவையில் இருந்து கவனத்துடன் கேட்டனர். அவர் பேசி முடித்துவிட்டு வெளியேறியதும், அடுத்துப் பேச ராஜபக்ச மேடையேறியபோது, அவையே காலியாக இருந்தது. அப்போதுதான் ராஜபக்சாவிற்கு தனது ‘பெருமை’ சர்வதேச அளவில் எந்த அளவிற்கு கொடி கட்டிப் பறக்கிறது என்பது.

  அதன் பிறகு உலகத் தலைவர்கள் பலரை தான் அளித்த விருந்திற்கு அழைப்பு விடுத்தார். வந்தவர் ஒரே ஒருவர்தான், அவர் ஈரான் அதிபர் அஹமதிநேஜாத். அவரும் 20 நிமிடம் இருந்துவிட்டு வெளியேறினார். இவரை எந்த ஊடகமும் திரும்பிப் பார்க்கவில்லை, அவ்வளவு புகழ்! 
 



உலகப் புகழ் பெற்ற லண்டன் விஜயம்!

 
 உலக நாடுகளில் எந்த ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு வரவேற்பை சந்தித்திருக்க மாட்டார்கள். விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் சென்று, வேறு எங்கும் தலை காட்ட முடியாமல், தனது நாட்டுத் தூதரகத்தில் பாதுகாப்பாக அடைக்கலம் புகுந்து, பிறகு பங்கேற்க வந்த நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டு, மீண்டும் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பெருமை மகிந்த ராஜபக்சவிற்கு மட்டுமே கிடைத்தது.

  ‘எங்கள் இனத்தை அழித்தொழித்த இனப் படுகொலையாளனை ஆக்ஸ்போர்டில் பேச அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறி, ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள், லண்டனில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் ஆர்ப்பாட்டம் நடத்தியது இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் மட்டுமின்றி, உலக நாடுகளிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் போராட்டத்தின் நியாயத்தை உலகம் மேலும் ஆழமாக உணர வைத்தது.

  பெண்கள், குழ்ந்தைகள், பெரியவர்கள் என்று அந்தக் குளிரில் வீட்டில் முடங்கிக்கிடக்க வேண்டியவர்களெல்லாம் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டம், ராஜபக்சவை தலைகுனிய வைத்தது.

  தெற்காசிய வல்லரசுகள் தனக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த ஆதரவு போதும், அவைகளைத் தாண்டி எந்த வல்லரசும் அல்லது ஐ.நா.வும் தன்னை நெருங்கிவிட முடியாது என்ற நினைத்திருந்த மகிந்த ராஜபக்சவை, இந்த ஓராண்டில் தமிழர்கள் துரத்தி, துரத்தி தமிழினப் படுகொலைக்கு நியாயம் கோரியது அவர்களின் விடுதலை போராட்டத்தில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

  தங்கள் நியாயமான போராட்டத்தை அழிக்க முற்பட்ட அரச பயங்கரவாதத்தை எதிர்த்து அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது, உலக நாட்டு அரசுகளின் துணையுடன் அதனை பயங்கரவாதமாக சித்தரிக்க முடிந்த மகிந்த ராஜபக்ச அரசிற்கும், அதற்கு துணை நின்ற இந்திய, சீன வல்லாதிக்கங்களுக்கும், நிராயுதபாணியாக தமிழ் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எதிர்கொள்ளவும் முடியவில்லை, பதில் கூறவும் இயலவில்லை!

 
தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதங்களையும், அரசுகளையும் விட வலிமையானது என்பது இந்த ஆண்டில் நிரூபணமானது.

வியாழன், 9 டிசம்பர், 2010


தமிழக அரசின் முகத்திரையைக் கிழித்த சீமான் விடுதலை

தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவருவதைக் கண்டித்து பேசியதற்காக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானை, தேசப் பாதுகாப்பு (National Security Act - NSA) சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என்று கூறி, அவரை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 


தேச பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு தவறாகவே பயன்படுத்தியுள்ளது என்பதை நிரூபித்துள்ளது.தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும் உத்தரவை கூடுதல் ஆணையர் பிறப்பிக்க முடியாது என்று கூறி, எவ்வாறு இச்சட்டம் அவசர கதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், ஹரி பரந்தாமன் ஆகியோர் கொண்ட அமர்வு, அரசு செய்த தவறை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி, அரசு வழக்கறிஞரை நோக்கி பல கேள்விகளை கேட்டுள்ளது.


   “தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டால், இங்கு படிக்கும் சி்ங்கள மாணவர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்” என்று சீமான் கூறியது எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் பேசியதுதானே தவிர, அது வன்முறையை தூண்டும் நோக்கம் கொண்டதல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.


   அதுமட்டுமின்றி, சீமான் பேசியதன் காரணமாக வன்முறை ஏதாவது ஏற்பட்டதா என்றும் அரசு வழக்கறிஞரை கேட்டுள்ளனர். அப்படி ஏதும் நடக்காதபோது தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று எவ்வாறு எடுத்துக்கொள்வது என்றும் கேட்டுள்ளனர். நீதிபதிகளின் கேள்விகள் எதற்கும் அரசு வழக்கறிஞரால் பதில் கொடுக்க முடியவில்லை. 


   அதுமட்டுமல்ல, சீமானின் பேச்சு உணர்ச்சியை தூண்டக்கூடியதாக இருந்தது என்று அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதற்கு நீதிபதிகள் எழுப்பிய கேள்வியே மிகவும் கவனிக்கத்தக்கதாகும். சிறிலங்க இராணுவத்தினர் இசைப்பிரியா என்ற தமிழ் பத்திரிக்கையாளரை மானபங்கப்படுத்தி கொலை செய்த காட்சிகளை பிபிசி உள்ளிட்ட பன்னாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றனவே, அவைகள் கூட உணர்ச்சியைத் தூண்டக்கூடியதுதான், அதற்காக அரசு அந்த தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை எடுத்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


  ஆனால் இதற்கெல்லாம் தமிழக அரசின் வழக்கறிஞரிடம் எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நீதிபதிகள் கேட்டனர், இது என்ன அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? என்று. 


   அதுவே உண்மையாகும். தமிழக மீனவர்கள் கால் நூற்றாண்டிற்கும் மேலாக சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு, 500க்கும் அதிகமானோர் அவர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிறகும், அவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, இந்தியாவின் நாடாளுமன்றத்திலேயே சிறிலங்காவை தங்களது நட்பு நாடு என்று அறிவிக்கிறது. இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தமிழின உணர்வு பொங்கும் தமிழக அரசும் துணைபோகின்றது.


   தமிழக மீனவர்களை கண்டுகொள்ளாமல், சிறிலங்க அரசுடன் நட்பு பாராட்டும் மத்திய, மாநில அரசுகளின் முகத்திரையை கிழிப்பதாக சீமான் பேச்சு இருந்ததால் அவர் தேசப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் அடைத்தனர். எனவே ஐயத்திற்கிடமின்றி இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே

செவ்வாய், 23 நவம்பர், 2010

இளம் எழுத்தாளர் ம.பிரபாகரனின் “கண்ணாடி” சிறுகதை தொகுப்புக்கு - பாலமுரளிவர்மன் உரை

இளம் எழுத்தாளர் ம.பிரபாகரனின் “கண்ணாடி” சிறுகதை தொகுப்புக்கு
                                            - பாலமுரளிவர்மன் உரை

   இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி. படைப்பாளி அவன் வாழும் காலத்தின் கண்ணாடி. தனக்கு முன்னால் நிகழ்வதை அப்படியே பிரதிபலிப்பது அவனது படைப்பொழுக்கம்.

   பொறுப்புள்ள படைப்பாளனின் வெளிப்பாடாக உருவெடுக்கும் இலக்கிய வடிவம் எதுவாயினும் அதன் உள்ளடக்கம் ஒப்பனையற்றதாக இருத்தல் அவசியம். அலங்காரம் போர்த்தி தங்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாத நேர்மையோடும், கூச்சத்துக்கு இடமளிக்காத முழு நிர்வாணத்துக்கு ஒப்பான உண்மைத் தன்மையோடும் படைப்பை வெளிக் கொணர்வதற்கு, மாபெரும் துணிச்சல் தேவைப்படுகிறது. தன் சமூகத்தை, தன் மக்களை, அவர்களது அடித்தட்டு வாழ்க்கையை அக்கறையோடு அணுகுபவனுக்கு மட்டுமே அந்த துணிச்சல் சாத்தியமாகிறது. தனது பார்வையினூடாக நிகழ்வுகளைப் பிரதிபலித்திருக்கும் பிரபாகரனுக்கு அந்தத் துணிச்சல் இருப்பதை இத்தொகுப்பு அடையாளப்படுத்துகிறது.

   இரவுநேரம். அருகில் இளம்பெண், எகிறி எகிறிச் செல்லும் ஆட்டோவோடுப் போட்டிப் போட்டு இதயமும் குதிக்கிறது. தடுமாற்றம். சலனத்துக்கும், நிதானத்துக்கும் ஊடான பயணம். இடையிடையே தன்னை சுய விசாரணைக்கு ஆட்படுத்திக் கொள்ளும் அன்பழகனின் மனப்போராட்டம். இளமையின் இயலாமை வாசிப்பவனுக்குள்ளும் ஊடுருவுகிறது.

   பேருந்துக்கட்டணம் தொடங்கி பெண் வரை எண்ணற்ற கேள்விகளோடு அலையும் மனம். கேள்விகளால் கட்டப்பட்டதும், கட்டவிழ்க்க முயல்வதுமான வாழ்க்கை. தடுமாற்றம் வருவது இயல்புதான்.

   எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் எவ்வளவு தூரத்துக்குப் போனாலும் தான் பிறந்த ஊரை நேசிக்கும் ஒருவனது அடிமனதில் சொந்த ஊரின் மண் ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது. அம்மண்ணின் ஆன்ம சக்தியே அவனை இயக்குகிறது.

   தனது அடிப்படை ஆதாரத்தை, எளிமை கலையாத இயல்பை, தொன்மத்திலிருந்து தொடர்ந்து வரும் பண்பாட்டை இன்றைய கிராமங்கள் இழந்து வருவதை நமக்கு “அடையாளம்” காட்டுகிறார் பிரபாகரன். பல சிற்றூர்களில் முதன்முதலாகச் சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவை மாட்டு வண்டிகள் தான். மனிதனின் காலடிப் பட்டுச் செத்துப்போன புற்களின் மீது நடந்து உருவான ஒற்றையடிப் பாதையை விரிவாக்கி அகலச் சாலையாக அமைத்து தந்தவை மாட்டு வண்டிகள்.

   நேர்க்கோடாக இல்லாமல் ஒரு ஊரின் சாய்கோணத்தில் நீண்டு கிடக்கும் புதிய பாதையில் அம்மக்களின் வாழ்க்கை பயணிக்கிறது.

   ஆற்றிலிருந்து புறப்படும் அல்லது ஆற்றுக்குள் முடிவடையும் பாதையில், அறுவடை முடிந்த வயல்களை அறுத்துச் செல்லும் பாதையில் வேளாண்மை மறந்த நிலத்தின் மீதும், உழவுக்காகாத பொட்டல் காட்டின் நெற்றிப் பொட்டிலும் மாட்டு வண்டிகள் அழுத்தமாய் எடுத்த வகிடுகளில் இன்றும் மனிதர்கள் பயணிக்கிறார்கள். பாதைகள் இருக்கின்றன. ஆனால் பல சிற்றூர்களில் மாட்டு வண்டிகள் இல்லை. மாட்டு வண்டிகள் மறைந்து டிராக்டர்களாக உருமாற்றம் பெற்றுவிட்டதையும் வீட்டின் செல்வமாக வணங்கி மகிழ்ந்த மாடுகள் இல்லாமலே மாட்டுப் பொங்கல் கொண்டாட வேண்டிய சம்பிரதாயத்துக்குச் சனங்கள் ஆட்பட்டு விட்டதையும், வண்டிப் பயணத்துக்காக ஏக்கத்தோடு காத்து நிற்கும் குழந்தைகளின் மனதையும் படிக்கும் போது நமக்குள்ளும் பெருஞ்சுமை குடி கொள்கிறது. பூமியின் நடு நெஞ்சில் மாட்டு வண்டி பதித்துவிட்ட மாறாத தடம்போல் தனது ஆன்மாவை இழந்துக் கொண்டிருக்கும் சிற்றூர்களின் நிலை பளிச் சென்று நம் நெஞ்சில் பதிகிறது.

   ‘பள்ளித் தோழர்கள்’ கதையில் இளைஞர்களின் அலட்சியப் போக்கினால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக்காட்டும் அதே வேளையில் “பங்களா வீடு” தலைப்பில், பள்ளிக் கூடங்களின் ஏற்றத்தாழ்வு, இளம் சிறாரின் நெஞ்சில் உருவாக்கும் வடுக்களை படம் பிடிப்பதன் மூலம் சமச்சீர் கல்வியை கதாசிரியர் வலியுறுத்துகிறார்.

   இவளின் நீதிப் புத்தகம், வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் மகாதேவி தனக்கென வகுத்திருக்கும் நீதியை ஆசிரியர் விவரிப்பதில் நகைச்சுவை வெளிப்பட்டாலும் மகாதேவியின் குணாதிசயம் அவள் மீது இரங்கத் தக்கநிலையை உண்டாக்குகிறது. எழுத்தாளருக்குள்ளிருக்கும் நீதிச் சொல்லும் குணம் எல்லாக் கதைகளிலும் தலை தூக்குகிறது என்றாலும் மகாதேவி விசயத்தில் சற்று தாராளமாகவே நீதியை நிலை நாட்டுகிறது.

   “அகதிகள்” கதை மிகவும் அழுத்தமான பதிவு. சொந்த நாடு, சொந்த ஊரு என்று நாம் சொல்லிக் கொண்டாலும் சொந்த வீடு இல்லாதவர்கள் அனைவரும் இங்கே “அகதிகள்” தான் என்பதை பதிவு செய்திருக்கிறார். பிரபாகரனின் படைப்புகள் குறித்து எழுத நேர்ந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி. எளிமையான, உண்மையான படைப்புகளை தமிழ் இலக்கிய வாசகர்கள் அரவணைக்க வேண்டும். அப்போதுதான் “வாழ்க்கை” இலக்கியமாகும். அதற்கான வாசலை வாசகர்கள் திறந்து வைப்பார்கள் என்று நம்புகிறேன். உரை எழுதுகிறேன் என்று பெயரில் படைப்புக்குறித்த முன் கணிப்பை வாசகர்களுக்கு உருவாக்கிவிடக் கூடாது எனவே ஏனையப் படைப்புகள் வாசகர்களின் பொறுப்பு.

   பக்கக் கட்டுமானம், படைப்பின் வடிவம், என்கிற எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல் முழுமையான படைப்புச் சுதந்திரத்தோடு, தன்னை துரத்திய வினாக்களையும், தான் துரத்தி அலைந்த வினாக்களுக்குமான தேடுதலையும் பதிவு செய்திருப்பது பிரபாகரனின் அப்பழுக்கற்ற மனமுதிர்ச்சிக்குச் சான்று. மிகச் சாதாரண மக்கள் படும் பாட்டை, பெரும் பதைபதைப்போடு கவனித்து இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என தனக்குள்ளிருந்து வெளிக்கிளம்பத் துடிக்கும் ஒரு படைப்பாளியின் மனநிலையை எல்லாப் பதிவுகளிலும் உணரமுடிகிறது.

   படைப்புக்கும், படைப்பவனுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் வாழ்வது அபூர்வம். அந்த வகையில் பிரபாகரன் ஓர் அபூர்வப்படைப்பாளி. பேராற்றல் மிக்க அவருக்குப் பெருங் கனவுகள் உண்டு!

   பிரபாகரன் தன் இனம், தன் மக்கள், தன் சமூகம் குறித்த அக்கறையோடும், சக மனிதர்களை நேசிக்கும் குணத்தோடும் திகழ்வதில் வியப்பொன்றுமில்லை. அந்தப் பெயரின் மகத்துவம் அப்படி.!

   தம்பி பிரபாகரனின் பெயரை என்றென்றும் தமிழுலகம் சொல்லும்! அவரது கனவுகள் நிச்சயமாய் வெல்லும்!
                                                                            பாலமுரளிவர்மன்


ஞாயிறு, 14 நவம்பர், 2010

பர்மாவின் ஜனநாயகப் போராளி ஆங் சான் சூ கி விடுதலை!

பர்மாவின் ஜனநாயகப் போராளி ஆங் சான் சூ கி விடுதலை!


   மியான்மர் நாட்டில் 15 ஆண்டு காலம் வீட்டுக்காவலில் இருந்த தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூ கி (வயது 65) யின், தண்டனை நீட்டிப்பு காலம் நவம்பர் 13 ‌ஆ‌ம் தே‌‌தியுட‌ன் (நேற்று) முடிவுக்கு வருவதால், அவரது விடுதலை உத்தரவில் ராணுவ ஜெனரல்கள் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 11) கையெழுத்திட்டனர்.


மியான்மரில் கடந்த 1990-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், தேசிய ஜனநாயக லீக் தலைவி ஆங் சான் சூ கியை வீட்டுக்காவலில் அடைத்தது.


15 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் இருந்த மியான்மர் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கி நேற்று விடுதலையானார்


சூ கியின் விடுதலையையொட்டி, அவரது வீட்டு முன்னர் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களும், ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். 


இந்நிலையில் நேற்று மாலை சூ கி வீட்டுக்காவலிலிருந்து விடுதலை செய்யபட்டதாக அரசு அதிகாரி ஒருவர் அறிவித்தார். 


இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். . 


மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய அவர் மக்களிடையே செல்வாக்கு பெற்றார். இதனையடுத்து இராணுவ அரசு அவரை சிறை வைத்துது. 65 வயதாகும் சூ கி மியான்மரில் இருந்த 21 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். 


இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்த, ஆங் சாங் சூ கி 1991 ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆங் சான் சூ கியை விடுவிக்கக் கோரி, உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்தும், மியான்மரின் ராணுவ அரசு செவிசாய்க்கவில்லை.


இதனிடையே, 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராணுவ ஆதரவு கட்சி வெற்றி பெற்றது.


அந்தத் தேர்தலில், ஆங் சான் சூ கியின் கட்சி பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி எத்தகைய நடவடிக்கையாலும் சீமானை சிதைக்க முடியாது. - அமீர்


 இனி எத்தகைய நடவடிக்கையாலும் சீமானை சிதைக்க முடியாது. - அமீர்
   


    சிறைவாழ்க்கை சீமானை முழு நேர அரசியல்வாதியாக மாற்றிவிட்டது, வரிந்து கட்டி களம் இறங்கும் அரசியல்வாதியாக சிறை அவரை வார்த்துவிட்டதென இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.கடந்த 11ம் தேதி நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் சுந்தர்ராஜன், அமீர், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ''சந்தனக்காடு'' வ.கௌதமன் ஆகியோர் வேலூருக்கு போய் சிறையில் சீமானை சந்தித்து பேசியுள்ளனர்.
இது தொடர்பாக  இயக்குனர் அமீர் ஜூனியர் விகடனுக்கு அளித்த நேர்காணல் ...
''எப்படி இருக்கிறார் சீமான்?''
''சீமானை சிறையில் பார்த்ததுமே நான் கேட்டது, 'சிறையில் இருப்பது நீங்களா... இல்லை நானா?' என்றுதான். தலை வாராத முடியோடும், தாடியோடும் இருந்த என்னைப் பார்க்கையில்தான் சிறையில் இருப்பது போல் இருந்தது. மழுமழு ஷேவ் செய்து செம ஸ்மார்ட்டாக இருக்கிறார். சொகுசாக இருக்கிறார் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. சிறை அவரை எந்த வகையிலும் சிதைக்கவில்லை. ஆனால், உடம்பு கொஞ்சம் குறைந்திருக்கிறது. 'உள்ளே அதிக நேரம் கிடைக்கிறதால் உடற்பயிற்சிகள் நிறைய பண்றேன். அதான் உடம்பு இன்னமும் இறுகிடிச்சு..!' என்றார். அவர் முகத்தில் கவலையே தெரியவில்லை. வழக்கமான களையும், சிரிப்பும் அப்படியே இருக்கிறது!''
''ஈழ விவகாரம் குறித்து ராமேஸ்வரத்தில் பேசியதற்காக நீங்களும் சீமானும் மதுரை சிறையில் ஒன்றாக இருந்தீர்கள். இப்போது வேலூர் சிறையில் அவரைத் தனியாகப் பார்த்தபோது உங்கள் மனநிலை?''
''கண்ணெதிரே ஈழ மண்ணையும் மக்களையும் வாரிக்கொடுத்துவிட்டு, அது பற்றிய கவலையே இல்லாமல் அடுத்த கட்ட வேலையில் தீவிரமாகிவிட்டவர்கள் நாம். ராமேஸ்வரத்தில் ரத்தம் முறுக்கேறப் பேசிய நான், இன்றைக்கு ஜெயம் ரவியையும் நீது சந்திராவையும் வைத்துப் படம் பண்ண வந்துவிட்டேன். சீமான் அப்படி இல்லை. ராமேஸ்வரத்தில் பேசியபோது இருந்த உணர்வும் வேகமும் வேலூர் சிறைக்குள்ளும் இருக்கிறது. கடைசிவரை போராடும் நியாயமான மூர்க்கம் அவரிடம் இருக்கிறது. ஒரு அரசியல் தலைவராக உருவெடுக்கும் தைரியமும் வீரியமும் அவரிடம் இருக்கிறது. வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவனாக, அவரைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டது உண்மை!''
''இத்தனை மாத சிறை வாழ்க்கை சீமானின் பொது வாழ்க்கைப் பார்வையை எந்த வகையிலேனும் மாற்றி இருக்கிறதா?''
''கிடையவே கிடையாது... சிறை வாழ்க்கை சீமானை முழு நேர அரசியல்வாதியாக மாற்றி விட்டது என்பதுதான் உண்மை! ஈழப் பிரச்னை, அரசியல், அன்றாட நிகழ்வுகள் என்றுதான் சீமானால் இனி இயங்க முடியும். சிறை வாழ்க்கை மட்டுமல்ல... இனி எத்தகைய நடவடிக்கையாலுமே அவரைச் சிதைக்க முடியாது. சிறையில் இருந்து வெளியே வந்த உடன் அவருக்கு நடிக்கவோ, இயக்கவோ நேரம் இருக்குமா என்பது தெரியவில்லை. வரிந்துகட்டி களம் இறங்கும் அரசியல்வாதியாக சிறை அவரை வார்த்துவிட்டது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் அவருக்கு இருக்கிறதோ இல்லையோ... ஆனால், வரும் காலத்தில் அனல் கிளப்பும் ஆயுதமாக அவர் மாறுவார்!''
''சக கலைஞனாக நினைத்துக்கூட சினிமா சமூகத்தினர் அவருக்குத் துணையாக நிற்கவில்லையே... அறிவிக்கப்படாத சில அரசியல் மிரட்டல்கள்தான் இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறதே?''
''சீமானை சந்திக்க விரும்பாதவர்கள் பரப்பிவிடும் கருத்து இது. அவரைப் பார்க்கச் சொல்லி யாரும் வற்புறுத்தவும் இல்லை. பார்க்கக்கூடாது என யாரும் மிரட்டவும் இல்லை. அவரைப் பார்த்துவிட்டு வந்ததால் என்னையும் சத்யராஜையும் இனி தள்ளி வைத்துவிடுவார்களா? அவரைச் சந்திப்பவர்கள் யார் யார் என்பதை கண்காணித்து மிரட்டுவதுதான் அரசாள்வோருக்கு வேலையா? இந்த விஷயத்தில் சீமானும் மிகுந்த தெளிவோடு இருக்கிறார். யாரும் தன்னை வந்து சந்திக்கவில்லையே என்கிற எதிர்பார்ப்போ வருத்தமோ அவருக்கு இல்லை. திரைத் துறையினர் அவரைப் பார்க்கத்தான் வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஆனால், அதற்காக மிரட்டல், உருட்டல் என அரசு மீது பழிபோட்டு அவரைப் பார்க்காமல் இருப்பதற்கு காரணம் கற்பிப்பது தவறு! உண்மையில் சொல்வதானால், சீமான் சிங்கள மாணவர்கள் குறித்து என்ன பேசினார் என்பதே இங்கே பலருக்கும் தெரியவில்லை. அப்படியிருக்க, அந்தப் பேச்சு இறையாண்மை மீறலா... அரசியல் சட்ட மீறலா என்பதெல்லாம் அவர்களுக்கு எப்படித் தெரியும்?''
''அவரை வெளியே கொண்டுவரும் முயற்சியில் திரைத்துறையினர் இறங்காதது நியாயமா?''
''இன்றைக்கு விஜயகாந்த்துக்கு ஒரு பிரச்னை வந்தால், அவருக்குப் பின்னால் நடிகர் சங்கமா வந்து நிற்கும்? அதேபோல்தான் சீமான் விவகாரமும். அவர் சினிமா இயக்குநர்களில் ஒருவர்தான். ஆனால், இன்றைக்கு அவர் ஒரு இயக்கத்தின் தலைவர். எதற்கும் அவர் பின்னால் நிற்பதற்கு ஒரு இயக்கம் இருக்கிறது. இத்தனை நாளை நெஞ்சுறுதியோடு கடந்துவிட்ட அவரை சினிமா சமூகத்தினர் போராடி வெளியே கொண்டுவர வேண்டியது இல்லை. அவரும் அதை எதிர்பார்க்கவில்லை!''
நன்றி - ஜூனியர் விகடன்


சனி, 13 நவம்பர், 2010

இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது : அருந்ததி ராய்


இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது : அருந்ததி ராய்

 
  காஷ்மீர் குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருந்ததி ராய் காஷ்மீரில் சுதந்திரத்திற்காக போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்று கூறுவது சரியல்ல என்றார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
   
   ஒடுக்கப்பட்டவர்களின் சர்வதேசக் குரலாக ஒலிக்கும் அருந்ததி ராய் இந்திய அரசிற்கு  பெரும் பிரச்சனையாக பிரச்சனைக்குரியவராக இருந்துவருகிறார்.

இந்தநிலையில்  அருந்ததி ராய்  ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்:
   
 ''இந்த அறிக்கையை ஸ்ரீநகர் காஷ்மீரிலிருந்து வெளியிடுகிறேன். இன்றுகாலை செய்தித்தாள்கள் அனைத்திலும் பிரிவினைவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் நான் கைது செய்யப்படக் கூடும் என செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீர் குறித்து நான் சமீபத்தில் பேசிய பேச்சை விமர்சித்துள்ளன.
ஆனால் காஷ்மீர் மக்கள் தினசரி சொல்லி வருவதைத்தான் நான் அன்று பேசினேன். சுதந்திரம் வேண்டும் என்று கூறுகிறார்கள் காஷ்மீரிகள். அதைத்தான் நான் எனது பேச்சில் குறிப்பிட்டேன். கடந்த பல ஆண்டுகளாக பலரும் பேசியதை எழுதியதைத்தான் நான் சொன்னேன்.
   
   நீதி மறுக்கப்படுபவர்களுக்கு அதை வழங்குங்கள் என்றுதான் நான் எனது பேச்சுக்களில் எப்போதுமே வலியுறுத்தி வருகிறேன். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றுதான் நான் சொன்னேன்.
   
   எனது பேச்சுக்களை சரிவரப் புரிந்து கொண்டு படித்துப் பார்த்தால் அதில் நீதி வழங்குங்கள் என்ற கோரிக்கை புதைந்திருப்பதை உணர முடியும். காஷ்மீர் மக்களுக்கு நான் நீதிதான் கேட்கிறேன். உலகின் மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி தேவை என்றுதான் நான் கேட்டேன்.

 தங்களது சொந்த நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்ட, விரட்டப்பட்ட பண்டிட்டுகளுக்கு நியாயம் வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன். காஷ்மீரில் தங்களது உயிரை நீத்து கடலூரில் ஏதோ ஒரு மூலையில் குப்பைகளுக்கு மத்தியில் சமாதியாகக் கிடக்கும் தலித் வீரர்களுக்கு நியாயம் வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன்.

   காஷ்மீரில் நடந்து வரும் இந்த தேவையற்ற போருக்கான செலவுகளை அப்பாவி மக்களின் தலை மீது சுமத்துகிறீர்களே, அந்த அப்பாவி இந்தியர்களுக்கு நீதி வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன்.

   நான் நேற்று ஆப்பிள் நகரான சோபியானுக்குச் சென்றிருந்தேன். ஆசியா, நிலோபர் என்ற இரு பெண்களின் கொடூரக் கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு 47 நாட்கள் அந்த நகரம் மூடிக் கிடந்தது. அந்த இரு பெண்களின் மரணத்திற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை. நிலோபரின் கணவரும், ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன். கோபமும், விரக்தியும், வேதனையும் கொப்பளிக்கும் முகங்களுடன் குழுமியிருந்த மக்களுக்கு மத்தியில் நான் ஷகீலுடன் பேசினேன். அவர்களுக்கெல்லாம் இப்போது உள்ள ஒரே கோரிக்கை இந்திய அரசிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்பது மட்டுமே. அப்போதுதான் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று அங்குள்ள மக்கள் கருதுகிறார்கள்.

  கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை சந்தித்தேன். ஒரு இளைஞனுடன் நான் பயணித்தபோது, தாங்கள் எப்படியெல்லாம் பாதுகாப்புப் படையினரால் தண்டிக்கப்பட்டோம் என்பதை அந்த இளைஞன் விவரித்தான். தனது நண்பர்கள் 3 பேரையும் பிடித்த பாதுகாப்புப் படையினர் கை விரல்களில் இருந்த நகங்களை பிடுங்கி பாதுகாப்புப் படையினர் கொடூரமாக தண்டித்ததாக கூறினான்.

   நான் திங்கள்கிழமை ஸ்ரீநகரில் பேசியதும், பின்னர் டெல்லியில் நான் பேசியதும், எனது கருத்து அல்ல, எனது குரல் அல்ல. மாறாக காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன். அவர்கள் தினசரி அதைத்தான் கூறி வருகிறார்கள், கோரி வருகிறார்கள்.

   கடந்த சில ஆண்டுகளாக நான் அவதூறாகவே பேசி வருவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இந்தியா உடைய வேண்டும் என நான் விரும்புவதாக கூறுகிறார்கள். ஆனால் நான் சொல்ல வருவது வேறு. மக்கள் கொல்லப்படக் கூடாது, கற்பழிக்கப்படக் கூடாது, கைது செய்யப்படக் கூடாது, விரல்களிலிருந்து நகங்களை பிடுங்கிப் போடும் வேலையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடக் கூடாது என்பது மட்டுமே. எனது ஒரே வலியுறுத்தல். அன்பும், அமைதியும் தழைத்தோங்க வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை. காரணம், இப்படி தண்டிக்கப்படும் இவர்கள் அனைவரும் நம்மைப் போல இந்தியர்கள்தான்.

   இப்போது எனது குரலை ஒடுக்க அரசு முயலுகிறது. தங்களது மனதிலிருந்து வரும் கருத்துக்களை எழுத்தாளர்கள் கலைஞர்கள் வெளியிட்டால் அதை அடக்க முயல்வது கோழைத்தனம். நீதி கேட்டுகுரல் கொடுத்தால் சிறை என்பது மிகவும் அவமானகரமானது.

   ஜாதியின் பெயரால், மதங்களின் பெயரால் அட்டூழியம் செய்பவர்கள், அரசியல் பெயரால் கொலை செய்து குவிப்பவர்கள் தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டு பெரும் ஊழல் செய்து அதில் திளைப்பவர்கள்,  ஏழை மக்களை சுரண்டிப் பிழைப்பவர்கள் எல்லாம் சுதந்திரத்தோடு நடமாடலாம். ஆனால் அப்பாவிகளுக்காக நீதி கேட்டு குரல் கொடுத்தால் சிறைவாசம், அடக்குமுறை என்று இருக்கும் இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் 

புதன், 10 நவம்பர், 2010

மிஷ்கின் எனப்படும் மனநோயாளிக்கு... -பாலமுரளிவர்மன்....

மிஷ்கின் எனப்படும் மனநோயாளிக்கு...
                       பாலமுரளிவர்மன்.

“இந்த  உலகின் மிகமுக்கியமான பிரச்னையாக இருப்பது எதுவென்றால், முட்டாள்கள் அதீத தன்னம்பிக்கையோடும் அறிவாளிகள் அவநம்பிக்கையோடும் தம்மீதே கொண்டிருக்கும் சந்தேகங்களோடும் வாழ்வதுதான்.”
                         -ஷேக்ஸ்பியர்.

இதே சிக்கல் திரையுலகிலும் நீடிக்கிறது. தமிழ்த்திரையுலகில் ஒருவன் வெற்றியாளனாக உருவாகும்முன் சந்திக்கின்ற எண்ணற்ற போராட்டங்களுக்குள் முதன்மையானது, புத்திசாலிகளுக்கும் தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்பவர்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

உடம்பெல்லாம் வாயாக, வாயெல்லாம் கொழுப்போடு திரியும் இந்த மிஷ்கின் சாதித்தது என்ன ? இந்த சமூகத்தில் எதை மாற்றியமைத்துவிட்டார் ?

மாபெரும் படைப்பாளியான ரித்விக் கடாக் ஒருமுறை சொன்னார்.
“ மக்கள்தாம் எப்போதுமே மகத்தானவர்கள் என நான் நம்புகிறேன். அவர்கள்தாம் தங்களை தாங்களே மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். நான் எதையும் மாற்றியமைப்பதில்லை.”

இதுதான் தன்னுடைய கலையையும், மக்களையும் மதித்து நேசிக்கும் உயரிய கலைஞனின் பண்பு. மகத்துவமிக்க படைப்புகள் மக்களிடமிருந்துதான் உருவாகின்றன. வாழ்க்கையை விட்டுவிட்டு வேறு எதை உன்னதமாக படைத்துவிட முடியும்.

இத்தகைய உயர்வான குணங்களை மனநோயாளியான உன்னிடம் எதிர்பார்க்கக்கூடாது என்பது எமக்குப் புரிகிறது. ஆனால் திரைப்பட இயக்குனர் என்பவன் இந்திய நாட்டின் பிரதமர் அல்ல என்கிற எதார்த்தத்தை நீ புரிந்து கொள்ளவேண்டும்.

உன்னைப்போன்றவர்களும் உண்டுக் கொழுப்பதற்காக தன் உயிர் உருக்கி, உடல் வருத்தி உழைக்கின்ற ஏழை விவசாயியை விட நீ ஒன்றும் கிழித்துவிடவில்லை என்பதை தினமும் கொழுத்த வாயை திறப்பதற்கு முன் நீ எண்ணிப்பார்க்க வேண்டும். அத்தகைய உயர்வான விவசாய குடும்பங்களிலிருந்தும் உழைக்கும் மக்களிடமிருந்தும் உருவாகி தங்களது வாழ்க்கையை படைப்பாக்க வேண்டுமென்கிற லட்சிய வேட்கையுடன் உதவி இயக்குனர்களாக வந்திருக்கிற எளிய குடும்பத்து இளைஞர்களை நீ இழிவான குடிபிறப்பிலிருந்து வந்தவன் என்பதற்காக உனக்கு சமமாக கருதி இளக்காரமாக பேசுவதை எங்களால் அனுமதிக்க முடியாது.

நீ நிமாய்கோஷ் போலவோ, எழுத்தாளர் ஜெயகாந்தன், அவள் அப்படித்தான் ருத்ரய்யா மாதிரியோ தமிழ்த்திரைப்படத்திற்கான புதிய பரிணாமத்தை கொடுத்தவனா ? அல்லது பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா மற்றும் பாலா போல திரைப்படத்தின் போக்கை திசை திருப்பிவிட்டவனா ? புடோவ்கின், ஐசன்ஸ்டீன் போல திரைப்படத்திற்கென கோட்பாடுகளை உருவாக்கி தந்தவனா ? உனக்கேன் இவ்வளவு நீளமான நாக்கு?

                                                      
பெண் சுகத்துக்காகவும், பெட்டி நிறைய பணம் சம்பாதிக்கவும் உன்னைப்போன்றவர்கள் சினிமாவை தேர்ந்தெடுத்திருக்கலாம். என் போன்றவர்கள் சமூக மாற்றத்திற்கான களமாக திரைப்படத்தை கையில் எடுத்திருக்கிறோம்.

எனக்கு சினிமா ஒரு ஆயுதம். நான் திரைத்துறைக்கு வராமல் போயிருந்தால் ஆயுதம் தூக்கியிருப்பேன். அடக்கி ஒடுக்கப்படும் எம்மக்களுக்கான கருவியாக சினிமாவை கருதும் என்போன்ற இளைஞர்களும் இருபத்தியொரு வயதுள்ள எல்லா சராசரி இந்திய இளைஞர்களும் நீ சொன்ன இலக்கணத்திற்கு பொருந்தமாட்டார்கள். என்னை உனக்கு தெரியுமா? எங்களோடு கைகோர்த்து களமாடுகிற தம்பிகளை நீ அறிவாயா ? உன்னைப்போல சுயநலமாக ஒரு நாளும் நாங்கள் இருந்ததில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக எந்த நிலையிலும் தெருவில் இறங்கி போராடுகிறோம். நீ என்றைக்காவது முன் வந்திருக்கிறாயா? உன் தலைக்கொழுப்பு உன்னை தரையில் இறங்க அனுமதித்திருக்கிறதா? இயக்குனர் சங்கத்தின் 40-வது ஆண்டுவிழா நடந்தபோதே இறுமாப்புடன் விலகி இருந்தவன்தானே நீ ! உன்னைப்பற்றிய உனது மதிப்பீடுதான் எவ்வளவு மடத்தனமானது? இரண்டு லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன் என்று சொல்லிக் கொள்கிறாயே அந்த புத்தகங்கள் உனக்கு கற்றுக்கொடுத்தது என்ன? படிப்பு மனிதனை பண்படுத்ததானே செய்யும். தன் அகங்காரத்தை ஒடுக்கி உனக்குள் உன்னை தேடச் செய்யவில்லையெனில் நீ ஏதோ தவறான புத்தகங்களை படிக்கிறாய் என்பது புரிகிறது. அதிகம் படிக்க படிக்க மனம் விழிப்பு கொள்ளும். வாய் தானாக மூடிக்கொள்ளும் ஆனால் நீ ஒவ்வொரு முறையும் திருவாய் திறப்பதில் ஒன்று புரிகிறது. வாங்கிய புத்தகங்களை நீ படிப்பதே இல்லை. மேசை மீது பரப்பி வைத்துக் கொண்டு வருகிறவர்களிடம் எல்லாம் நடைபாதை வியாபாரி போல விரித்துக் காட்டுவதிலேயே நிறைவு பெற்றுவிடுகிறாய்.



இதுவரை உனக்கு இரண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. மூன்றாவதில் பெரும் சிக்கல். இடைவெளிக்குப் பின் நான்காவதாக ஒரு படம். இதைத்தவிர வேறென்ன செய்துவிட்டாய்? உன்னுடைய படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பது பற்றி திரையுலகில் பெரிய பட்டிமன்றமே நடக்கிறது. நீ ஒரு கைதேர்ந்த திருடன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பிறகு எதற்காக இவ்வளவு ஆணவம்?


உனக்கு நினைவிருக்கிறதா ? நாங்கள் ஐந்துபேர் உன்னை ஒரு நாள் சந்தித்தோம். இயக்குனர் திரு.சேரன் குறித்து எவ்வளவு கேவலமான தொனியோடு நீ பேசினாய் ?
“ சேரனுக்கே ஒண்ணும் தெரியலங்க . யுத்தம் செய் ஷூட்டிங்ல மொத அஞ்சுநாள் ரொம்ப தடுமாறி போயிட்டாரு, எதுவுமே அவருக்கு புரியல, எம் பேட்டனையே அவரால புரிஞ்சுக்க முடியல. என்னடா இந்த மனுசன் இப்படி இருக்காரேனு நெனச்சேன், அப்பறந்தான் கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு செட்டானாரு”

சொன்னியா இல்லியா ...?  நல்ல தாய் தகப்பனுக்கு பொறந்திருந்தா உன்னால இத மறுக்க முடியாது. தமிழ்த்திரையில் அண்ணன் சேரன் ஆழமான தடம் பதித்தவர். அவருடைய எல்லா படைப்புகளுமே தமிழர் வாழ்வை உணர்வுப் பூர்வமாக எங்கள் நெஞ்சில் விதைத்தவை. அவரைப்பற்றியே ஏளனமாக பேசிய போதுதான் உன்னுடைய மனவிகாரத்தை நாங்கள் புரிந்து கொண்டோம்.

இங்கே இருக்கிற உதவி இயக்குனர்களுக்கு வாழ்க்கை அனுபவம் இல்லை என்கிறாய்! அமெரிக்காவில் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இளைஞன் தன் வேலையை விட்டுவிட்டு உன்னிடம் உதவி இயக்குனராக வரப்போவதை சொன்ன நீ
“ அவன் பேசுறத கேக்குறப்பவே தெரியுது. நிச்சயமா நான் சொல்றேன் அவன் டைரக்டராயிடுவாங்க”

“எத வெச்சு சொல்றீங்க ?” நான் கேட்டதும் ஒருகணம் என்னை உற்றுப்பார்த்து விட்டு
“ எனக்கு தெரியும் ” என்றாய்.

இங்கிருக்கிறவர்களுக்கே வாழ்க்கை அனுபவம் இல்லை எனும்போது, இவர்களே மனிதர்களை படிக்காதவர்களாக உன் பார்வைக்கு படும்போது அமெரிக்காவில் இருப்பவனுக்கு மட்டும் என்ன அனுபவ அறிவு இருந்துவிட முடியும் ?

யாராவது ஒரு உதவி இயக்குனர் தனியாக சிக்கிவிட்டால், மேதாவித்தனத்தை காட்டுவதுதான் ஒரு இயக்குனருக்கு பெருமையா?
“தம் அடிப்பியா? சரக்கடிப்பியா? இதெல்லாங்கூட செய்யாம நீ என்னடா அஸிஸ்டென்ட் டைரக்டர் ? எதுக்கு சினிமாவுக்கு வந்த?”என்று கலங்கடித்திருக்கிறாயே ?உன்னளவில் வாழ்க்கை அனுபவம் என்பது குடிப்பதும் புகைப்பதும் தானா?

நீ முதலில் ஒன்றை புரிந்து கொள். பாட்டும் இசையும், கூத்தும் கலையும் எம் தமிழர் மரபில் உயிரோடு கலந்தவை. எங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஆதாரகாரணிகளாக இருப்பதும் கலைகள்தான்.

உதவி இயக்குனர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழனுக்கும் அவனது வாழ்க்கை அனுபவச் செறிவோடுதான் நிறைவடைகிறது. எல்லோரிடமும் ஓராயிரம் கதைகள் நிறைந்து கிடக்கின்றன. சொல்லவும், எழுதவும், திரைப்படமாக உருமாற்றுவதற்குமான வாய்ப்பு எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.

நீ என்னோடு புறப்பட்டு வர முடியுமானால் சொல். தஞ்சை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் கடைக்கோடி சிற்றூர்களுக்கும் செல்வோம். எங்கள் மனிதர்களை பார். எம்மக்களின் வாஞ்சை மிகுந்த நேசத்தை உணர். இவர்களை பற்றியா இந்த வெள்ளந்தியான மனிதர்களின் குடும்பப் பின்னணி பற்றியா கொச்சைப்படுத்தினோமென்று குறுகிப் போவாய்- நீ மனிதனுக்குப் பிறந்திருந்தால்!.

தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் மீது நீ ஏன் வார்த்தைகளை அமிலமாக அள்ளி வீசுகிறாய்? உன்னுடைய உள்மனதில் இருப்பது என்ன ? நீ யார்? எவ்விடத்திலிருந்து புறப்பட்டவன்? உன்னுடைய வேர் எங்கிருக்கிறது? எல்லாம் எங்களுக்கு தெரியும். உன்னுடைய திரைப்படங்களில் நீ ஏன் பெரும்பாலும் மலையாளிகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறாய் என்கிற உண்மையும் எங்களுக்கு தெரியாமல் இல்லை.

இங்கே பிழைக்க வருபவர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல. மாறாக எங்களை எதிரியாக கருதுகிற எவனுக்கும் இங்கு இடம் தர முடியாது. இனியும் உன் தடித்த நாக்கு எங்களுக்கு எதிராக நீளுமானால் நீ தமிழ்நாட்டிலிருந்து இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள நேரிடும் என்பதை மனதில் கொள். முந்தைய தலைமுறை போல இளம் தலைமுறை பெருந்தன்மை என்ற பெயரில் உறங்கிக்கிடக்காது என்பதை சூடு சொரணை உள்ள தமிழனாகவும், உருப்படியான உதவி இயக்குனராகவும் உனக்கு சொல்லிக்கொள்கிறேன்.அரையிருட்டு அறைக்குள்ளும் கருப்புக் கண்ணாடி அணிந்து கொள்ளும் உனக்கு எல்லாமே இருட்டாகத்தான் தெரியும்.

கண்களை விரி !  காதுகள் திற !  வாயை மூடு !