இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 செப்டம்பர், 2010

அயோத்தி தீர்ப்பு

                                         


அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மூவருக்கு, ஆளுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொடுக்க வேண்டும்' என, அலகாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மூன்றில் ஒரு பங்கு இந்துக்களுக்கும், இன்னொரு பங்கு முஸ்லிம்களுக்கு, மூன்றாவது பங்கு, "நிர்மோகி அகாரா' அமைப்புக்கு வழங்க வேண்டும். பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்களில் துவக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை, நாடே அதிக எதிர்பார்ப்புகளுடனும், பரபரப்புடனும் எதிர்பார்த்தது. நாட்டின் ஒட்டுமொத்த பார்வையும், நேற்று லக்னோவை நோக்கியே இருந்தது. நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால் மற்றும் சிப்காட் உல்லா கான் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. நேற்று மதியம் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சார்பாக ஆஜரான வக்கீல்கள் 20க்கும் மேற்பட்டோர், கோர்ட்டிலிருந்து வெளியே வந்து லக்னோ கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மீடியா சென்டரில் பேட்டியளித்தனர். பரபரப்பும், பதட்டமாக இருந்த சூழ்நிலையில் வக்கீல்கள் தாங்கள் எடுத்துரைத்த வாதங்களை விளக்கி, அதற்கு நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை கூறும்போதே, தீர்ப்பின் சாராம்சம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனி தீர்ப்பு வெளியிட்ட போதும், நீதிபதிகள் சிப்காட் உல்லா கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் கூறிய தீர்ப்பில், "இன்று ராமர் சிலை வழிபடும் இடம் இந்துக்களுக்கு சொந்தம்' என்று குறிப்பிட்டனர்.


தீர்ப்பின் விபரம் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தை, மூன்று பாகமாக பிரித்து, ஒரு பாகத்தை, "நிர்மோகி அகாரா' என்ற அயோத்தியில் நீண்டகாலமாக உள்ள சாமியார்கள் அடங்கிய குழுவுக்கும், இன்னொரு பங்கை சன்னி வக்பு வாரியத்திற்கும் (முஸ்லிம்), மற்றொரு பங்கை, "ராம் லாலா விராஜ்மான்' என்ற ராமர் சிலை வழிபடும் இடத்தை வைத்திருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். இடத்தை பிரித்து அளிக்கும்போது, தற்போது ராமர் சிலை உள்ள இடத்தையே இந்துக்களுக்கு ஒதுக்கவேண்டும். இடத்தை பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்கள் கழித்தே துவக்க வேண்டும். அதுவரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும். பிரச்னைக்குரிய இடம், ராமர் பிறந்த ஜென்மபூமி என்று நீதிபதிகள் மூவரும் தெரிவித்துள்ளனர்.



நிர்மோகி அகாரா:  ராமர் பிறந்த இடமான அயோத்தியில், பாரம்பரியமான உரிமையை நிலைநாட்டும் வகையில், அங்கு தங்கி வழிபடும் சாமியார்களின் அமைப்பு தான் நிர்மோகி அகாரா. இங்குள்ள சாமியார்கள் அன்றாடம் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அயோத்தியில் உள்ள பழைமையான அமைப்பு இது. 1885ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று, இந்த அமைப்பு, பைசாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 1959ம் ஆண்டில் இந்த அமைப்பு, சர்ச்சைக்குரிய இடம் தங்களுடையது என்று கோரியது. நேற்றைய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தின் மூன்றில் ஒரு பங்கு நிர்மோகி அகாராவுக்கு சொந்தம் என்ற தீர்ப்பால், இந்த அமைப்பின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.


ராம் லாலா: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், 1949ல் ராமர் சிலையை வைத்த அமைப்பு தான் ராம் லாலா விராஜ்மன். ராமர் பிறந்த இடத்தில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக்கூடாது என்ற தீர்ப்பால், அந்த சிலைகள் அமைந்துள்ள இடம், மசூதி குவிமாடம் இருந்த இடம் உட்பட மூன்றில் ஒரு பங்கு இடம் இந்த அமைப்புக்கு வழங்கி அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது. 

நீதிபதிகளின் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதே சமயம் சன்னி வக்பு போர்டும், இந்த வழக்கில் தொடர்புடைய இந்துமகா சபையும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்தன. 


இந்த தீர்ப்பு குறித்து சன்னி வக்பு வாரியத்தின் வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி கூறியதாவது : "அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து வழங்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம். "நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும்' என, ஐகோர்ட் தெரிவித்த பார்முலாவை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக் கொள்ளாது. ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். நிலம் விஷயத்தில் சரணடைந்து விட மாட்டோம். அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வந்தால், அதற்கும் சன்னி வக்பு வாரியம் தயாராக உள்ளது. பேச்சுவார்த்தைக்கு யாராவது முன்மொழிந்தால், அது நடக்கும். அடுத்த 90 நாட்களுக்கு தற்போதைய நிலை தொடரும் என்பதால், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய சன்னி வக்பு வாரியத்திற்கு கால அவகாசம் உள்ளது.


அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் கூட்டத்திற்குப் பின், அப்பீல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு செயல்பட மாட்டோம். மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடில்லை. பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய தீர்ப்பு எங்களுக்கு அதிருப்தி அளிப்பதோடு மட்டுமின்றி, முஸ்லிம்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களுக்கு எதிராகவும் உள்ளது. தற்போதைய நிலையில் இதை மட்டுமே தெரிவிக்க முடியும். தீர்ப்பை முழுமையாக படித்த பின்னரே மற்ற விவரங்களை தெரிவிப்போம். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்ல முடியும் என்பதால், மக்கள் அதிருப்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை இழக்க எந்தக் காரணமும் இல்லை. தற்போதைய பிரச்னையை யாரும் வீதிக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். நாடு முழுவதும் அமைதி பேணிக்காக்கப்படும் என, நம்புகிறேன். இவ்வாறு ஜாபர்யாப் ஜிலானி கூறினார்.

ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மறை‌க்க புலிகளு‌க்கு தடை: வைகோ



ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மக்கள் மன்றத்தின் முன் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக, '' விடுதலைப் புலிகள் மீது தடை'' என்ற கவசத்தை மத்தியஅரசு பயன்படுத்துகிறது என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கூ‌றினா‌ர்.

திருச்சியில் ஓவியர் புகழேந்தியின் "போர்முகங்கள் ஓவியக் கண்காட்சியை வைகோ பார்வையிட்ட பிறகு செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் அளித்த பேட்டி‌யி‌ல்
ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் உயிரோட்டம் மிகுந்தவை. அவர் ஈழம் சென்று பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து அங்கு இருந்த நிலைமைகளை உயிர்ச் சித்திரங்களாகத் தீட்டியுள்ளார். இந்த ஓவியங்கள் தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரிடம் தமிழ் ஈழ ஆதரவை ஏற்படுத்தும். இந்த ஓவியங்கள் இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றத்தை மனித உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன. சர்வதேச அனாதைகளாக ஈழத் தமிழர்கள் உள்ளனர். உலகில் வேறு எந்த இனத்திற்கும் இப்படி ஒருநிலை ஏற்பட்டதில்லை. தமிழர்களின் பூர்வீகப் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றப்படுகின்றனர். மீதமுள்ள தமிழர்களையும் அழித்துவிட்டு,இலங்கையை சிங்களர்களின் பூமியாக மாற்ற ராஜபக்சே திட்டமிடுகிறார்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என்று டெல்லிஉயர் நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் நான் வாதாடினேன். அப்போது, "தமிழர்கள் சர்வதேச அனாதைகளாக ஆகிவிட்டனர். விடுதலைப்புலிகள் மீதான தடையைக் காரணம் காட்டி இலங்கையிலிருந்து வரும் அகதிகளை முகாமில்அடைக்கின்றனர்; நாடு கடத்துகின்றனர்'' என வாதிட்டேன்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு தயாரித்து, அரசிதழில் வெளியிட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. "தனி ஈழம் அமைக்க விடுதலைப் புலிகள் போராடிவருகின்றனர். தமிழ் ஈழத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டை விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். இவர்கள் மீதான தடையை நீக்கினால், நம் நாட்டின் பாதுகாப்பிற்கு கேடாக அமையும்'' என்று கூறப்பட்டுள்ளது

தமிழ் ஈழம் என்று இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளைத்தான் விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். எந்த இடத்திலும் தமிழகத்தின் ஒரு பகுதியைக் கூட ஈழம் என்று அவர்கள் கூறவில்லை. அப்படிபிரகடனப்படுத்தியுள்ளதைக் காண்பிக்க முடியுமா?

மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மக்கள் மன்றத்தின் முன் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் மீது தடை என்ற கவசத்தைப் பயன்படுத்துகிறார்கள் இதற்குக் கருணாநிதியும் உடந்தையாக உள்ளார் என்று வைகோ கூ‌றினா‌ர்.

புதன், 29 செப்டம்பர், 2010

திரைப்பட இணை இயக்குனர் சூரியம்பட்டி சி. ரவிச்சந்திரன்








தன்னோடு இருக்கும் நண்பர்களை பெரிதும் நேசிப்பாயே....
நீ தலைவர் மீது கணக்கிட முடியாத பற்று, பாசம் வைத்திருந்தயே ... 
எவவளவு வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்வாயே ... 
தன் பணியிலும் இடைவிடாது ஏதாவது போராட்டத்தில் கலந்து கொள்வாயே ...
நீ மரித்தாலும் , உன்னை நாங்கள் ஒவ்வொரு போராட்டத்திலும் தேடிக் கொண்டிருக்கிறோம் ..

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பொன்மொழிகள்

பொன்மொழிகள் 


  • உணர்வுகள் மாறலாம், நினைவுகள் மாறுவதில்லை - ஜோயல் அலெக்சாண்டர்.
    சிந்திக்காதவன் முட்டாள்
    சிந்திக்கத் துணியாதவன் கோழை
    சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்
    நம்மால் எதிலும் தனித்து செயல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது வலிமை அற்ற மனம் தான்

  • அறிவாளிகள் சிறந்த எண்ணங்களை விவாதிக்கின்றனர், நடுத்தரமானோர் நிகழ்ச்சிகளை விவாதிக்கின்றனர், சாதாரணமானோர் மக்களை விவாதிக்கின்றனர்.
  • உன‌க்கு ஒரே ந‌ண்ப‌ன் ‌நீயே, ஒரே பகைவனு‌ம் ‌நீயே, உ‌ன்னை‌த் த‌விர பகைவனு‌ம் இ‌ல்லை, ந‌ண்பனு‌ம் இ‌ல்லை

  • இரவின் மடியில் சாய்ந்து கொண்டு விடியலுக்காக காத்திருப்பதை விட இரவின் கைபிடித்து நடைப்பயணம்-செய்த்து பார் விடியல் உனக்காக வரவேற்பு கம்பளம் விரித்து காத்திருக்கும் 
    சொற்ப இரண்டு நாட்களிலேயே, நாளை என்பது நேற்று என்றாகி விடுகிறது.

  • அனைத்துமே பூர்த்தியாகியிருக்க வேண்டும் முடிவில். அவ்வாறு இல்லையெனில் அது முடிவல்ல.

  • நட்பு என்பது ஈரமான சிமெண்ட் கலவையில் கால் பதிப்பது போன்றது. சிறிது நேரம் நின்றால் (காலடிச்) சுவடுகளை விட்டுச் செல்வோம், அதிக நேரம் இருந்தால் விட்டுச் செல்ல இயலாது.

  • சிந்தனை செய்யா மூளை, தேங்கிய சாக்கடை - யாரோ.

  • உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது ஒருவருக்கு. நீங்களே உலகமாக இருக்கலாம்.

  • நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.
    பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்
    நம்பிக்கைக்குரிய நண்பருக்கு ஈடு இணையான செல்வம் ஏதுமில்லை.

  • இளமை என்பது வயதால் அல்ல, எண்ணங்களாலே அறியப்படுகிறது.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

திலீபன் சிறப்புக் கவிதாஞ்சலி ...

திலீபன் சிறப்புக் கவிதாஞ்சலி



விடுதலை வேட்கை சுடராய் விழிகளில் நடனமாட
பறந்திடும் கேசத்தோடும் புன்னகை வதனத்தோடும்
நடந்தவன் நல்லூர் வீதி மேடையை நாடிச்செல்ல
திரண்ட எம் மக்கள் கூட்டம் - தெய்வமே! - என்றழைக்க
பஞ்சென வெண்மைக் கேசம் கொண்டதோர் பக்தி மாது
பையவே திலீபன் முன்னால் பாதையை மறித்து வந்து
கையிலே தாங்கிவந்த அர்ச்சனைத் தட்டைத் தொட்டு
விரலிலே விபூதி அள்ளி எம் வீரனின் நுதலில் பூச
பௌர்ணமித் திங்களாய் எம் திலீபனோ முகம் ஜொலித்தான்.
எங்களின் பிரச்சினைக்கு..... எங்களின் விடுதலைக்கு......
எங்களின் பங்குமின்றி எங்களின் விருப்புமின்றி
சிங்களம் பெற்றெடுத்த கிழநரி ஜெயவர்த்தனாவும்,
தன்னலம் மட்டுமேயோர் இலட்சியக் குறியாய்க் கொண்ட
அன்றைய பாரதத்தின் அரசியல் ஓச்சுவோனும்
தங்களுக்குள்ளே கூடித் தந்திரக் கூத்தடித்து
செய்தவோர் ஒப்பந்தத்தின் அம்சங்கள் ஐந்தினையே
செயற்படவைக்கத் திலீபன் வயிற்றுடன் போர்தொடுத்தான்.
பண்டமும் பருப்பும் வானில்-நாம்
உண்டிடவென்றே போட்டு
கண்டறியாதவொரு கரிசனைச் சாலம் காட்டி
தந்திரமாக எங்கள் தலைவனைக் கூட்டிச் சென்று
ஒன்றுமே இல்லா அந்த ஒப்பந்த ஓலைதன்னை
நிர்ப்பந்தமாகவே அவர் ஏற்றிட மிரட்டியங்கு
அறையிலே பூட்டி அவமானப் படுத்தி - ஐயோ
எத்தனை சாகசங்கள! எத்துணை கேவலங்கள்!
அந்த ஒப்பந்தப் பட்டோலையின்
உள்ளமைந்த வரிகளைத்தான்
உண்மையுடன் நிறைவேற்ற
உத்தமன் எம் திலீபன்-உள்ளார்ந்த வேட்கையுடன்
உண்ணா நோன்பு புக்கான்.
மக்களும் மாணவரும் மேடையைச் சூழ்ந்திருக்க
பக்கலில் மேடையிட்டு கவிதைகள் சொற்பொழிவு
உணர்வுகள் கொப்பளிக்கும் உயர்மிகு வேளையதனில்
திலீபனும் தன்னுணர்வில் மக்களோடிணைந்து கொண்டான்
ஒப்பிலா அந்த வீரன் உறுவினை கண்டு மக்கள்
வெப்பினார், வீரமுற்றார்
சங்கது சுட்டதைப்போல் மென்மேலும் தெளிவு பெற்றார்
பற்றது-சுய பற்றது விட்டுத் திலீபன்
பாடையை நோக்கிப் பயணம்
சொட்டதும் தளரா முனைப்பில்
வெப்புடன் தொடர்ந்த போதும்
புத்தனின் பாரதமோ பகர்ந்தது ஏதுமில்லை.
காந்தியைப் போற்றும் அந்த
இந்திய தேசம் அன்று
ஏந்திய ஒப்பந்தத்தைச்
சரிவரச் செய்யவில்லை.
காந்தியின் தேசமென்று புகழுரைத்தாரேயன்றி
அன்னவர் அகிம்சா வழியைப் புரிந்திட மறுத்தார்-ஐயோ
அந்தக் காந்தியும் கூட முன்னர்
நீருணவு அருந்தித்தானே
விரதமும் அனுசரித்தார்!
நீரதும் ஏலாத் திலீபன்,
இளமையின் ஆசாபாசா
உணர்வெலாம் ஒடுக்கிப் போரில்
ஆயுதம் ஏந்திக் காயம்
பட்டவன் பட்டும் மீண்டும்
உடலதை எரிக்கும் போரை
உவப்புடன் ஏற்ற வேளை
பதரெனப் பாரதத்தால்
புறமென ஒதுக்கப் பட்டான்.
கணம் கணமாக அந்த இந்தியப் பதிலைக் காத்து
பிணமெனும் நிலை வராமல் திலீபன்
வாழ்ந்திட வேண்டுமென்று
துடித்தனர் மக்கள் ஆங்கே
துவண்டனர் தாய்க்குலத்தோர்.
ஏதுமே எட்டவில்லை!??
ஐரிஸ் போராட்டவீரன்
பொபி சான்டஸ் என்ன செய்தான்?
சிறையிலே வதங்கி வாடி
வீரமாய் சாவணைத்தான்.
ஆயினும் அவனும்
நீராகாரம் நிதமும் உண்டான்.
நீரையே நினைத்திடாதவோர்
போரிலே குதித்த உலகின்-முதல்
மாபெரும் வீரனென்றால்
தலைவர் பிரபாகரன்தான் ஐயா,
எண்பத்தாறிலே-தலைவர்
நவம்பரில் போர் தொடுத்தார்
தகவற் தொடர்பினை வென்றெடுத்தார்.
அன்னவர் பாசறையில்
வளர்ந்தொரு வீரனாக
வந்த எம் வண்ணத் திலீபன்
கண்ணது போல அந்த
விடுதலை வேதம் காத்து
பொன்னதை யொத்த வேள்விப்
போரினைத் தொடர்ந்து நின்றான்.
மகத்தான அந்த மன உறுதி பாரீர்!
எக்கட்டத்திலேனும் தன் விருப்புக்கு மாறாக
மருந்தோ, சிகிச்சையோ, உணவோ, நீரோ
தந்திடக் கூடாதென்று சத்தியம் வேண்டிக் கொண்டே,
மேடையில் போயமர்ந்தான்-சந்தன மேனியாளன்
இறப்பின் பின்னரும்தன் ஈகத்தின் தொடர்ச்சியாக
உடலின் கூறுகள் உயர் கல்விக்கு உதவவென
மருத்துவ பீடத்திற்கு அனுப்பிடல் வேண்டுமென்றான்.
நிமிடங்கள் மணிகளாக
மணித்துளிகள் தினங்களாகி
ஓன்றாக இரண்டாக மூன்றாக நாட்கழிய
உடலால் சோர்வுற்றான்-மக்கள்
உள்ளங்களில் தீயிட்டான்,
எங்கும் எரியும் உணர்ச்சிப் பிரவாகம்,
முண்டியடித்துத் திரளும் சனக்கூட்டம்,
சீருடைச் சிறார்களின் தளர் நடைச் சோகம்,
ஊருராக ஊருக்கொண்டு மக்கள்
பேரணியாக நல்லூர் நகர்ந்தனர்,
திலீபனுக்குத் துணையாகத்
தம் வயிற்றில் தீ மூட்ட
அணியணியாக ஆட்கள் திரண்டனர்,
ஆங்காங்கு மேடைகள்,
ஆத்திர உணர்வு மக்களுள் கிளர்ந்தது,
கோத்திரம், குலம், சாத்திரம் யாவும்
கூடையில் போயின - சோற்றுப்
பாத்திரம் தொட மக்கள் கூசினர்,
தேற்றவோர் வார்த்தையின்றி
தேசம் சிவந்தது.
நல்லூரிலேயே அருகிலொருமேடை,
வல்லையில் ஐவர்,
முல்லையில் திருச்செல்வம்,
திருமலையில் வேறொருவர்,
மட்டுநகர் மேடையில் மற்றொருவர்,
எங்கும் வியாபித்த இலட்சியப் போர்த்தீ.
ஆயினும்,
பாரதபூமி பார்த்தே கிடந்தது.
தேரோடிய எம்மண்ணில்-கண்ணீர்
ஆறோடியது.
வசந்தம் வீசிய வாழ்நிலத்தில்
அக்கினிப் புயல் அனல் வீசியது.
நாட்கள் கடந்தன்
காந்தீயப் போர்வைகள் கிழிந்தன,
மகாத்மா என்ற மாபெரும் வார்த்தையை
தனக்கே உரித்தான
தனியான அணிகலனாக
தானே தனக்குச் சூடிக்கொண்ட பாரதம்
வேம் கலைந்து
விவஸ்தை கெட்டு-வெறும்
கோதாரியாக குறிகெட்டு நின்றது
காந்தீயமென்று போற்றிப் பூஜுக்கும்
குவலயத்து மக்களெல்லாம்
குருடர்களாய்ப் போயினரோ!
அந்தக் காருண்யப் பாதையிலே
அணுஅணுவாய் எரிந்தழியும்
திலீபமெனும் மெழுகுச் சுடர்-இந்தத்
தீன விழிகளில் ஈரமதைத் தரவில்லையா?!
மனித தர்மமென்ன மாண்டே போனதா?!
புத்தன் பிறந்த தேசமென்றார்களே
சித்தமே கல்லான எத்தர்களா இவர்கள்?!
சத்தமின்றி அமர்ந்திருந்து
சித்திரவதை தன்னை
மெத்தனமாய்க் கண்கொள்ளும்
வித்தையிலே விற்பன்னரோ?!
பத்திரமாய் நாம் வாழ
சித்திரமாம் எம் திலீபன்
கத்தியில்லா யுத்தமொன்றை
கணம்கணமாய் முன்னெடுக்க,
புத்தியிலே பொறிவெடித்து-எம்
புத்திரர்கள் எல்லோரும்
சத்திய வேள்வியிலே
சேர்ந்து குதித்தார்கள்,
சொத்தான எம் ஈழம்
பெற்றிடலே வேதமென்று
வற்றாத பேராறாய்
வரிசையிலே வந்தார்கள்.
உடல் வற்றி உயிர் வற்றிப் போன
எம் இளவல்,
கடல் வற்றிக் காய்ந்திட்ட
சவர் படிந்த நிலமாக-விழி
மடல் ஒட்டி வேதனையின்
விளிம்புகளைத் தொட்டு நின்ற-அப்
பதினோராம் நாளோர் பாவப்பட்ட
நாளென்றால்,
பன்னிரண்டாம் நாளை நான்
எப்படித்தான் பகர்ந்துரைப்பேன்.
நல்லூரின் வீதிதனில்
நாடறியாச் சனவெள்ளம்,
லட்சோப லட்சமாய்
பட்சமிகு மக்கள்.
கண்ணீரும் கதறல்களும்
காற்றோடு பேச-திலீபன்
கண்ணோடு கண்மூடினான்-ஈழ
மண்ணோடு சாய்ந்திட்ட
மாவீரர் எல்லோரும்
பண்ணோடு இசை பாடி
விண்ணோடு வரவேற்றனர்-அவனைக்
கண்ணோடு ஒற்றி
காதோடு கதை பேசி
தம்மோடு அணி சேர்த்தனர்.
நாம்
கண்ணீருக்கு அணை தேடினோம்
நிலை புரியாது தடுமாறினோம்
களம் புதிதாக வெளித்திடக்
களமாடச் சுயமாக கனலோடு
அணிதேடினோம்-இனிச்
சமர்தானே சகமென்று
திடமாகினோம்
புதுத் தெளிவோடு-பாசறை
புக ஓடினோம்.
நன்றி - புலிகளின்குரல் வானொலி
ஒலிபரப்பு-புலிகளின்குரல் வானொலி, சிறப்புக்கவிதாஞ்சலி.

லெப்டினன் கேணல் திலீபன் ...

         லெப்டினன் கேணல் திலீபன்

லெப்டினன் கேணல் திலீபன்
(பார்த்திபன் இராசையா - ஊரெழு, யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் - 27.11.1963
மண்ணின் மடியில் - 26.9.1987


தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் இந்தியப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர்.


1987 செப்டெம்பர் 15ஆம் தேதி  இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் தேதி  சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு திலீபன் தியாக மரணம் எய்தினார். இவர் லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்தார்.


ஐந்து அம்சக் கோரிக்கை


மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.


சிறைக் கூடங்களிலும் இராணுவ போலீஸ்  தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் புதிதாக போலீஸ்  நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
இவைதான் திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள் . 




'தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்!"


தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. இந்த முக்கிய விடயங்களைச் சற்று ஆழமாக அணுகித் தர்க்கிப்பதானது, தியாகி திலீபனின் இருபத்தி மூன்றாம் ஆண்டு நினைவு தினத்திற்குப் பொருத்தமானதாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.


தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான்! இங்கே தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருக்கிற இயல்பு என்னவென்றால், அடக்குமுறைகளுக்கு - அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் - விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பெரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது தேசியத் தலைவரின் அடிப்படை இயல்பாகும்!.


இந்த இயல்புத் தன்மைதான் தமிழீழத் தேசியத் தலைவரையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் போது, இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராகத் தலைவர் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பைத் தேசியத் தலைவர் பிரபாகரன் உடனே ஆரம்பித்தார். இந்தச் சாகும் வரையிலான உண்ணா நோன்பு ஒரு போராட்ட வடிவமாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால்தான் முதன்முதலில் செய்யப்பட்டது.




தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள், எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணா நோன்புப் போராட்டத்தை ஒருநாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் தலைவர் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். 'அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணா நோன்பை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணா நோன்பை ஆரம்பிக்கலாமே" - என்றுகூட அவர்கள் தலைவரிடம் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய பதில் இதுதான்:


'இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!".


ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்புச் சாதனங்கள் முதலானவற்றைத் தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. தலைவர் தன்னுடைய உண்ணா நோன்பை முடித்தார்.


தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்கின்ற தேசியத் தலைவரின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் உள்ளுர படிந்திருந்தது. தேசியத் தலைவர் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான். திலீபனின் இந்த உண்ணா நோன்புப் போராட்டம், தமிழீழத் தேசியத் தலைவரின்; இயல்பையும் குறியிட்டுத்தான் நிற்கின்றது!


இந்த இலட்சிய உறுதிதான், தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் - 1987ல் - நடாத்தினான். 'ஒரு சொட்டுத்  தண்ணீர் அருந்தாமல், நான் எனது உண்ணா நோன்பை ஆரம்பிக்கப் போகின்றேன்" - என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் திலீபனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். 'தண்ணீரையாவது குடித்து உண்ணாவிரதத்தைத் தொடரலாம்"- என்று தலைவர் பிரபாகரன் திலீபனைக் கேட்டுக்கொண்டார்.


ஆனால் திலீபனோ, தலைவரிடமே பதில் கேள்வி ஒன்றைக் கேட்டான். 'அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தீர்கள். என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீPர்கள்?"


அத்தகைய ஒரு தலைமை! இத்தகைய ஒரு தியாகி!.


உயர்ந்தவர்களிடம் மட்டுமே காணக்கூடிய இலட்சிய உறுதி அது!


இவ்வாறு, தமிழீழத் தேசியத் தலைவரின் இயல்பிற்கும் ஒரு குறியீடாகத்தான் தியாகி திலீபன் விளங்கினான்.
('தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு - திலீபன்! - சபேசன்எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)

திலீபன் பாடல்! 

ஈழம் எம் நாடெனும் போதினிலே
ஒரு ஈகம் பிறக்குது வாழ்வினிலே
திலீபன் தந்த இவ் உணர்வினிலே
தாகம் வளருது நாட்டினிலே


வேகம் கொண்டதோர் பிள்ளையவன்
வேதனை வேள்வியில் உயிர் எறிந்தான்
தாகம் தமிழீழம் ஒன்றே என்று
மோகம் கொண்டு தன் உடல் தகித்தான்


அந்நியர் காலடி எம் மண்ணில்
ஆக்கமாய் என்றுமே ஆகாது-எனப்
புண்ணியவான் இவன் கூறிவட்டு
புதுமைப் புரட்சியில் விழி சாய்த்தான்.


தொட்டு நாம் மேடையில் ஏற்றி விட்டோம்
உடல் கெட்டவன் பாடையில் இறங்கிவந்தான்
பட்டறிவு இதுவும் போதாதா
நம் மக்களும் முழுதாய் இணைவதற்கு


கட்டையிலே அவன் போனாலும்
வெட்டையிலே உண்மை எடுத்துரைத்தான்
பட்டை யடித்த பாரதப் படையினரின்
கொட்டமடக்கிட வழி சமைத்தான்.


நெட்ட நெடுந்தூரம் இல்லை ஐயா- வெகு
கிட்டடியில் எம் வெற்றி வரும்.
கொட்டமடித்தவர் எல்லோரும்-எம்
காலடி தொட்டிடும் வேளை வரும் 
         மாவீரன் திலீபன் அவர்களுக்கு கறுப்புக் குரலின் வீரவணக்கம் ...

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

(தனது மகளின் திருமணத்துக்கு ரசிகர்கள் வர வேண்டாம் என்ற ரீதியில் ரஜினி வெளியிட்ட அறிக்கை குறித்து ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கடித வடிவிலான கட்டுரை)
 
அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!

உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து  நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!

இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர

ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.

அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!

நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்து விடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம்பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!

உங்களை கேவலமாகத் திருமாவளவன் [^] வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!

'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!

எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்                     
                                                                                                             நன்றி : ஜூனியர் விகடன் ....

திங்கள், 6 செப்டம்பர், 2010

அருந்ததிராய் உரை: வெற்றி மக்களுக்கே! ....

அருந்ததிராய் உரை: வெற்றி மக்களுக்கே!

கீற்று இணையத்தளத்தில் வெளியாகியிருக்கும் அருந்ததிராயின் உரை தண்டகாரண்ய காட்டில் கார்ப்பரேட் இந்தியப் பேரரசு  நடத்தி வருகிற அழித்தொழிப்பு, படுகொலை அரசியலை பதிவு செய்கிறது. சனநாயகம், மக்களின் உரிமைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் வாசிக்க வேண்டியது.நன்றி: கீற்று.காம் 
(சென்னையில் 2010 சூன் 4ஆம் நாள் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு நடத்திய அரங்கக் கூட்டத்தில் எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய உரையின் தமிழாக்கம்) தொகுப்பு : வேல்முருகன்
அனைவருக்கும் வணக்கம். இங்கு உங்கள் முன் நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்குத் தெரிந்ததுதான், நான் எழுத்தாளரே தவிர, பேச்சாளர் அல்ல. ஆகவே, என் பேச்சில் குற்றங்குறைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.
எடுத்த எடுப்பில் நாம் கருத்தளவில் சிலவற்றைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஊடகங்கள், உள்துறை அமைச்சர், இந்திய அரசு ஆகியோர் நாட்டில் அமைதியின்மை நிலவுவதாகவும், அமைதியை மீட்கவும் நடுத்தர வர்க்கத்தினரையும் அமைதி விரும்புவோரையும் சாமானிய கிராமப்புற மக்களையும் பாதுகாக்கவும் வேண்டுமானால் போர் தொடுக்கவும் பாதுகாப்புப் படைகளை ஈடுபடுத்தவும் வேண்டிய தேவை இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இராணுவத்தை அழைத்தாக வேண்டும் என்று பேசப்படுவதை நேற்றைய செய்தியேடுகளில் படித்திருப்பீர்கள். நேர்மாறானதே உண்மை. அரசுக்குத்தான் போர் தேவைப்படுகிறது, அவசரமாகத் தேவைப்படுகிறது. அரசாங்கம் என்பதே இல்லாமற் போய்விட்டது. இப்போதிருப்பது ஒரு பெருங்குழும அரசுதான். இந்தப் பெருங்குழும அரசுக்குப் போர் தேவைப்படுகிறது; அவசரமாகத் தேவைப்படுகிறது.
மாவோயிஸ்டுகள் 
2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடனே பிரதமர் முதலில் வெளியிட்ட கருத்துகளில் ஒன்று மாவோயிஸ்டுகள்தான் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று; உண்மையில், அவர் அப்படிப் பேசிய நேரத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் மாவோயிஸ்டுகள் அநேகமாய் அடியோடு துடைத்தெறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை இழந்து அம்மாநிலத்தை விட்டுத் துரத்தப் பட்டிருந்தார்கள். மாவோயிஸ்டுகள் அநேகமாய்த் தம் வரலாற்றிலேயே மிகவும் தாழ்வுற்றிருந்தார்கள்.


ஆனால், பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனே சுரங்கக் குழுமங்களின் பங்கு விலை திடீரென்று உயர்ந்தது. அவர்கள் பங்குச் சந்தையிலே பெருத்த இலாபம் ஈட்டினார்கள். ஏனென்றால் அந்தப் பகுதிகளில் ஏதோ நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாக அதைக் கருதினார்கள். சில மாதங்களுக்குள் 2005-06 வாக்கில் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பெரிய சுரங்கக் குழுமங்களோடும், பெரிய அகக் கட்டமைப்புக் குழுமங்களோடும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 


சல்வா ஜுடும் 
பஸ்தாரில், டாடா, எஸ்ஸார் குழுமங்களோடு ஒருங்கிணைந்த உருக்கு தயாரிப்பதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிச் சில வாரங்களுக் குள்ளேயே ஒரு செய்தி வந்தது. நக்கலைட்டுகள் குறித்துச் சலிப்புற்ற பழங்குடி மக்கள் ஒன்று சேர்ந்து சல்வா ஜுடும் என்கிற தன்னெழுச்சிப் படையை அமைத்திருப்பதாக அந்தச் செய்தி கூறியது. சல்வா ஜுடும் என்பதை அமைதி வேட்டை என்றோ, தூய்மை வேட்டை என்றோ மொழி பெயர்க்கலாம். முதலில் பலரும் இந்தக் கதையை நம்பிவிட்டனர். இவர்களுக்கு அரசே ஆயுதம் கொடுக்கும் செய்தி வெளியான பிறகுதான் உண்மை வெளிவந்தது. இந்த சல்வா ஜுடும் படைக்கு டாடா, எஸ்ஸார் குழுமங்கள் நிதியுதவி செய்வதாக இந்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அறிக்கையே தெரிவித்தது. பிறகு இந்த அறிக்கை திரும்பப் பெறப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுச் சில வாரங்களுக்குள் சல்வா ஜுடும் பற்றி நாம் கேள்விப்பட்டோம்.


இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பாதுகாப்பதற்காகத்தான் சல்வா ஜுடும் ஊர் ஊராகச் சென்றது. அடிப்படையில் அதன் பணி என்பது மக்களைக் கிராமங்களிலிருந்து துரத்தியடிப்பதே. அது கொலையிலும,; தீவைப்பிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டது. மக்களைச் சாலையோரத்திய முகாம்களுக்குள் விரட்டியது. இது 'நிலச்சுத்திகரிப்பு நடவடிக்கை" என்று அழைக்கப்பட்டது.


இதற்கான இராணுவ உத்தியைக் கண்டுபிடித்தவர் பிரித்தானியப் படைத் தளபதி ஜெனரல் கிரீக்ஸ். அவர் மலேசியாவில் கம்யூனிஸ்டு களுக்கு எதிராகப் பிரித்தானியர் நடத்திய போரில் இந்த உத்தியைத்தான் கையாண்டார்.


மக்களை அச்சுறுத்தி ஊரை விட்டு வெளியேற்றிக் காவல்துறையின் முகாம்களுக்குள் அடைப்பதுதான் அது. தண்டகாரண்யப் பகுதியில் இந்த உத்தியைக் கொண்டு 660 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. 50,000 மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். மூன்றரை இலட்சம் மக்கள் காணாமற் போய் விட்டார்கள். இன்று வரை அவர்களைக் காணவில்லை. சிலர் அடுத்திருந்த ஆந்திரப் பிரதேசத்துக்குப் போய் விட்டார்கள். ஆனால் பலர் அஞ்சி நடுங்கிக் காடுகளில் ஒளிந்துள்ளார்கள். ஆனால் முப்பதாண்டுகளாக மாவோயிஸ்டு இயக்கம் அந்தப் பகுதியில் வளர்ந்து வருகிறது. அது சுரங்கம் வெட்டுவதை எதிர்ப்பதற்கான இயக்கமன்று. பெருங்குழுமங்களின் சுரங்க வேட்டை தொடங்குவதற்கு ஏழாண்டு முன்பே மாவோயிஸ்டு இயக்கம் வந்துவிட்டது என்பதை நாமறிவோம். பழங்குடி மக்கள் போராடத் தொடங்கிப் பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகே மாவோ பிறந்தார் என்பதையும் நாமறிவோம்.


தண்டகாரண்யத்தில் என்ன நடந்தது என்றால், மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில், மிருகத்தனமான நிலச் சுத்திகரிப்பு நடவடிக்கைதான் இடம் பெற்றது. சல்வா ஜுடும் எதிர்விளைவையே உண்டு பண்ணியது. அதன் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் வளர்ந்தார்கள் என்பதே உண்மை. அவர்களின் படைவீரர் தொகை பன்மடங்கு பெருகியது. ஏனென்றால், கொள்ளைகளும் தீவைப்புகளும் பாலியல் வன்கொடுமைகளும் பழங்குடி மக்களைச் சீற்றமடையச் செய்து, மாவோயிஸ்டுகளின் பக்கம் தள்ளிவிட்டன. அவர்கள் கூட்டம் கூட்டமாக மக்கள் விடுதலை கெரில்லாப் படையில் சேர்ந்தார்கள்.


பச்சை வேட்டை 
இன்று இந்திய நாடெங்கும் பச்சை வேட்டை என்பது 'நீ எங்கள் பக்கம் இருக்கிறாய், இல்லையேல் எங்கள் பகைவனின் பக்கம் இருக்கிறாய்" என்ற புஷ் கொள்கையை அடியொற்றியே நடைபெறுகிறது. நீ எங்கள் பக்கம் இருக்கிறாய் என்றால் பெருங்குழுமங்களை ஆதரிக்க வேண்டும். நீ எங்களை எதிர்க்கிறாய் என்றால், நீ மாவோயிஸ்டாக இருந்தாலும் சரி, காந்தியவாதியாக இருந்தாலும் சரி, காந்திய சோசலிசவாதியாக இருந்தாலும் சரி, உள்ðர்ப் பழங்குடி இளைஞராக இருந்தாலும் சரி, நீ ஆயுதம் தரித்தவன் என்றாலும் சரி, தரிக்காதவன் என்றாலும் சரி, ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை உள்ளவன் என்றாலும் சரி, இல்லாதவன் என்றாலும் சரி, நிலத்தையும் இயற்கைச் செல்வாதாரங்களையும் பெருங்குழுமங்கள் எடுத்துக் கொள்வதை எதிர்க்கிறாய் என்றால் நீ ஒரு பயங்கரவாதி.


இப்படித்தான் மாவோயிஸ்டு என்ற சொல்லுக்கான, இலக்கண வரையறையை விரிவுபடுத்தி விட்டார்கள். அநீதியை எதிர்க்கிற எவரையும் குறிக்கும் வகையில் அதன் பொருளை விரிவுபடுத்தி விட்டார்கள். இவ்வாறு நம் உள்துறை அமைச்சரே மாவோயிஸ்டு இயக்கத்துக்கு மிகவும் வெற்றிகரமான, மிகப் பெரிய ஆள்சேர்ப்பு முகவர் என்று சொல்லலாம். சிதம்பரம் 'ஒரு மறைமுக மாவோயிஸ்டு" என்றும் கூட சிலர் வேடிக்கையாகச் சொல்கின்றனர். எந்த அரசியல் கட்சிதான் தன்னைப் பெரிதாகக் காட்டிக் கொள்ள விரும்பாது? அந்த அழைப்பை அவர்கள் ஏன் மறுக்கப் போகிறார்கள்?


ஆனால், இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்; தந்தேவாடாவில் மாவோயிஸ்டுகள் மைய சேம காவல் படையைத் தாக்கிய செய்தியைப் பெருங்குழும ஊடகங்;கள் திரும்பத் திரும்ப வெளியிட்டன. அடுத்து நடந்த விபத்தில் தொடர்வண்டி தடம்புரண்ட போது, யார் செய்தது என்று தெளிவாகத் தெரியாத போதே, இது மாவோயிஸ்டுகளின் வேலைதான் என்று ஊடகங்களும், உள்துறை அமைச்சகமும் உறுதியாக நம்புகின்றன. சாதாரண மக்களை எப்படித் தாக்கலாம்? என்று அவைக் கூக்குரலிட்டன. சாதாரண மக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் நான் நியாயப்படுத்த மாட்டேன். அப்படி நியாயப்படுத்துவதற்காக நான் வரவில்லை. ஆனால் நாம் இன்று இங்கே பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட ஆயிரக்கணக்கான ஆயுதக் காவல்படையினர் கலிங்காநகரிலும், ஜகத்சிங்புரத்திலும், ஜார்க்கண்டிலும் நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டுள்ள செய்தியை யாரும் வெளியிடவில்லை. அங்கெல்லாம் டாட்டாக்களும், ஜிண்டல்களும், மிட்டல்களும் இன்னும் இவைபோன்ற பெருங்குழுமங்களும் நிலப்பறிப்புச் செய்வதை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். 


ஊடகங்களின் பங்கு 
இப்படிப் போராடுகிற ஒவ்வொருவரையும் மாவோயிஸ்டு என்று முத்திரை குத்துவதன் வாயிலாகப் பச்சை வேட்டை நடவடிக்கை நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. அது நம் எல்லோரையும் குறி வைக்க முயல்கிறது. சுவாரசி யமான வழிகளில் இது நடப்பதை நான் உங்களுக்குச் சொல்வேன்:


மும்பையில் இதே போன்ற ஒரு கூட்டத்தில் நேற்று முதல்நாள் உரை யாற்றினேன். இங்கு போலவே ஏராளமான பத்திரிகை யாளர்கள் வந்திருந்தனர். மறுநாள் காலை இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பைப் பதிப்பு போன்ற பல்வேறு ஏடுகளில் அக்கூட்டம் பற்றி விரிவான செய்திகள் இடம் பெற்றிருந்தன. எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இந்தச் செய்தி இடம்பெற்றது. ஆனால் மறுநாள் அரசாங்கத்துக்குச் சொந்தமான செய்தி முகமையாகிய பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (Pவுஐ) மட்டும் வேறு மாதிரியாக இந்தச் செய்தியை வெளியிட்டது. அருந்ததி சொல்கிறார்: 'நான் ஒரு மாவோயிஸ்டு' என்று; 'என்னைக் கைது செய்து பாருங்கள்' என்று அரசுக்குச் சவால் விடுகிறார், என்ற செய்தியை பி.டி.ஐ. வெளியிட்டது. இது முழுக்க முழுக்கப் பொய்ச் செய்தி. இதை நான் குறிப்பிடுவது நான் கைதுக்கு அஞ்சுகிறேன் என்பதால் அன்று. நான் மாவோயிஸ்டுகளுக்கு எதிரானவள் என்பதாலும் அன்று. 


என்னைப் பற்றி . . . 
 நான் எவ்விதச் சார்புமற்ற சுதந்திரமான எழுத்தாளர். எதிர்ப்பியக்கத்தின் பக்கம் நின்று கொண்டே கேள்விகள் கேட்கும் உரிமை எனக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். திட்டவட்டமாக நான் எதிர்ப்பியக்கத்தின் பக்கம்தான் நிற்கிறேன். ஆனால் காந்தியவாதிகள், காந்திய சோசலிசவாதிகள், ஆயுதப் போராளிகள், போர்க் குணமிக்க மாவோயிஸ்டுகள் என்று பலதரப்பட்டவர் களாலும் ஆனதே இந்த எதிர்ப்பியக்கம். ஆனால் அனைவரும் பெருங்குழுமக் கொடுந்தாக்கு எனும் ஒரே பகையை எதிர்த்தே போராடி வருகிறார்கள். ஆனால் நான் பேசாததைப் பேசியதாகப் பி.டி.ஐ. செய்தி வெளியிட்ட உடனே முன்பு சரியாகச் செய்தி வெளியிட்ட ஏடுகளும் இப்போது பொய்ச்செய்தியைப் படியெடுத்து வெளியிட்டு விட்டன. தொலைக் காட்சிகளும் செய்தியை மாற்றி வெளியிட்டன. இதெல்லாம் முத்திரை குத்துகிற முயற்சியே என்கிறேன். இந்த விவாதத்தை அவர்கள் முடிந்த வரை அசிங்கப்படுத்த முயல்கிறார்கள். அவதூறுகளை அள்ளித் தெளிக்க முயல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் சாயம்பூசி மூலையில் தள்ளி அச்சுறுத்தி, வாயடைக்கச் செய்ய முயல்கிறார்கள்.


என்னைப் போன்ற ஒருத்திக்கே அவர்களால் இதையெல்லாம் செய்ய முடியும் என்றால், பிலாஸ்பூரிலும், கலிங்கா நகரிலும், ராய்ப்பூரிலும் பிற இடங்களிலும் போராடுகிற கிராம மக்களுக்கும் செயல்முனைவர்களுக்கும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று எண்ணிப் பாருங்கள். எங்கள் பக்கம் இல்லாதவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிரானவர்களே என்ற புஷ் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். இதெல்லாம் எப்படித் தொடங்கியது? எப்போது தொடங்கியது? இந்தப் பெரிய பெரிய அகக் கட்டமைப்புத் திட்டங்கள் நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கி விட்டன என்பது நமக்குத் தெரிந்ததே. பெரும் பெரும் அணைகள் கட்டியதால் மட்டும் மூன்று கோடியே நாற்பது இலட்சம் மக்கள் வீடுவாசல் இழந்து புலம் பெயர்ந்துள்ளார்கள் எனத் தெரிகிறது. இந்த நாட்டின் பழங்குடி மக்கள் தொகை மட்டுமே உலகில் பெரும்பாலான நாடுகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் கூடுதலாகும். நலிந்து கிடக்கிற இந்த மக்கள்தாம் இன்று அச்சுறுத் தலுக்கு ஆளாகியுள்ளனர்.


அமெரிக்க அணியில் இந்தியா ஆனால் பின்னோக்கி எண்ணிப் பார்த்தால்… 1989இல் ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான மலைகளில் சோவியத்துக் கம்யூனிசத்துக்கு எதிரான புனிதப் போரில் முதலாளியம் வெற்றி கண்டபோது இந்த நாடு உட்பட உலகமுழு வதும் அணி மாறியது. அதுவரை அணி சாரா நாடாக இருந்த இந்தியா இப்போது முழுக்க முழுக்க அணி சார்ந்த நாடாகி விட்டது. அது இசுரேல் போன்ற ஒரு நாட்டிற்கே கூட்டாளி ஆகி விட்டது. பாலத்தீனத்தை ஆதரித்து வந்த இந்தியா இன்று வெட்கங்கெட்ட முறையில் இசுரேலுக்கும் அமெரிக்காவுக்கும் கூட நேச நாடாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. அந்த நேரத்தில் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங்.


காங்கிரசுக் கட்சியால் இரண்டு பூட்டுகள்; திறந்து விடப்பட்டன. ஒன்று பாபர் மசூதியின் பூட்டு, இன்னொன்று இந்தியச் சந்தைகளின் பூட்டு. இந்த இரு பூட்டுகளையும் திறந்து இரு வகையான முற்றாதிக்கங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். ஒன்று இந்து அடிப்படைவாதம். மற்றொன்று சந்தை அடிப்படைவாதம். இந்த இரு அடிப்படைவாதப் போக்குகளுக்கும் இறுதியில் அததற்குப் பொருத்தமான பயங்கரவாதிகள் தேவைப்பட்டார்கள். ஆகவே ஒருபுறம் இசுலாமியப் பயங்கரவாதிகளையும் மறுபுறம் இப்போது மாவோயிஸ்டுப் பயங்கர வாதிகளையும் தயாரித்தார்கள். இந்த இரண்டுக்கும் நடுவில் இந்த அரசாங்கத்தின் பொருளியல் கொள்கைகள் முன்தள்ளப்படுகின்றன. இராணுவ அரசு இல்லாவிட்டால், போலீஸ் அரசு இல்லாவிட்டால் இதற்குமேல் இந்தக் கொள்கையை முன்தள்ள முடியாது. ஏனென்றால் இந்த வளர்ச்சி வீதமும் சனநாயகமும் ஒத்துப் போகக் கூடியவை அல்ல. இதனால் எங்கு வந்து நிற்கிறோம் என்றால், எத்தனையோ ஆண்டுகளாக இராணுவ ஆட்சியில் இருந்துள்ள பாகிஸ்தானில் சனநாயகம் வேண்டும் என்று மக்கள் போராடும் அதே போது, நமக்கு சனநாயகம் இருப்பதாக நாம் நினைத்த இந்தியாவில் நடுத்தர வர்க்கமும் பெருங்குழும ஊடகங்களும் இராணுவ ஆட்சி, காவல்துறை ஆட்சி வேண்டுமென்று கூக்குரலிடு கின்றன. இராணுவம் வரட்டு மென்று அவர்கள் வெளிப் படையாகக் கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் இராணுவத் தளபதியும் வான்படைத் தளபதியும் சற்றே தயக்கம் காட்டியபோது, இராணுவத்தை சனநாயகமய மாக்குவது என்றும், சனநாயகத்தை இராணுவமய மாக்குவது என்றும் பகட்டுறப் பேசப்பட்டது. ஆனால் உண்மையில், கிலானி இங்கே கூறியது போல், இராணுவம் சனநாயகத்தன்மை கொண்டதன்று. 


மக்கள் மீது போர் 
நம் மக்கள் மீதான புதிய போர் என்று எல்லோரும் குறிப்பிடுகிறோம். இது புதியதன்று. ஏனென்றால் - நம் மக்கள் என்பது யாரைக் குறிக்குமோ நானறியேன் - இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே போர் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. அது ஆட்சிப் பரப்புகளைக் கைப்பற்றிச் சேர்த்துள்ளது. மக்கள் மீது போர் தொடுத்துள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், காசுமீர், தெலங்கானா, பஞ்சாப், கோவா, ஐதராபாத், நக்சல்பாரி இயக்கம்… என்று காலமெல்லாம் போர்தான். இந்த நாடு தன் மக்கள் மீதே போரில் ஈடுபடாத ஆண்டு எதுவுமில்லை. இது என்ன வகையான போர்? நாகர்களுக்கு எதிராக, மணிப்பூரிகளுக்கு எதிராக, காசுமீரிகளுக்கு எதிராக, சீக்கியர்களுக்கு எதிராக, ஏழை எளியவர்களுக்கு எதிராக, தெலங்கானாவில் தலித்துகளுக்கும் ஆதிவாசிகளுக்கும் எதிராக, மேற்கு வங்கத்தில், பெரும்பாலும் பழங்குடிகளான நக்;சலைட்டுகளுக்கு எதிராக… எப்போதுமே கீழ்ச்சாதியினருக்கு எதிராக, முசுலீம்களுக்கு எதிராக, கிறித்தவர்களுக்கு எதிராக, பழங்குடி மக்களுக்கு எதிராக இந்தப்;போர் நடந்து வருகிறது. இந்த அரசு பிறந்த நாள் முதல் தன் மக்கள் மீதே போர் புரிந்து வரும் மேல்சாதி அரசாகும். இது புதிய போர் அல்ல என்று பேராசிரியர் சாய்பாபா இங்கே எடுத்துக்காட்டினார். இது இயற்கைச் செல்வாதாரங்களுக்கான போர். இலங்கையில் நடைபெற்றவை குறித்து நீங்கள் அனைவரும் அடைந்துள்ள வேதனையை நானறிவேன். அங்கு நடைபெற்ற இனப்படுகொலையில் பத்தாயிரக் கணக்கானத் தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். இலங்கையில் நடைபெற்றது தமிழர்களுக்கு எதிரான போர்தான், அதில் ஐயமில்லை. ஆனால் அது பெருங்குழுமப் போரும் ஆகும் என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும்.


இன்று இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பாகிய 'ஃபிக்கி' இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டி வருகிறது. இந்திய அரசாங்கம் எப்போதுமே முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கிறது. இது குறித்து ஏதாவது செய்திருக்க வேண்டியவை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளே. ஆனால் அவை எதுவும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய வெட்கக்கேடு! ஏனென்றால் அவர்கள் இதை நிறுத்தியிருக்க முடியும். என்றாலும் நிறுத்தவில்லை. அவர்கள் ஒதுங்கி நின்று கொண்டார்கள்.


இன்று இந்தியப் பெருங்குழுமங்கள் அங்கே போய்க்கொண்டிக்கின்றன. மேலும் மேலும் பணம் ஈட்டுவதற்காக அவை போகின்றன. இதே போன்ற நிலைமைதான் இந்தியாவின் மையப்பகுதிகளிலும் உருவாகி வருகிறது. இந்தப் பகுதிகளை அரசினர் 'மாவோயிஸ்டு வேட்டை" என்கின்றனர். நாம் 'எம்ஒயுயிஸ்டு வேட்டை" என்கிறோம். ஏனென்றால் அங்கெல்லாம் எம்ஒயு (ஆழுரு) எனப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு உட்படாத மலையோ காடோ எதுவுமில்லை. இது நான் முன்பே சொன்னது போல் - மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரன்று. இது இந்த நாட்டில் வறியவர்களிலும் வறியவர்களாக உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு எதிரான போரே ஆகும். தண்டகாரண்யத்தைப் பொறுத்தவரை, இலங்கை அரசு சென்ற அந்த எல்லை வரை இந்திய அரசு செல்லுமளவுக்கு இந்தியாவில் நாம் விட்டு விட மாட்டோம் என்று நினைக்கிறேன்.


இலங்கையும் இந்தியாவும்
 இலங்கை அரசு செய்தது போல் இந்திய அரசு வெளிப்படையாக வான் தாக்குதல் நடத்தவும் சுட்டுத் தள்ளவும் கூட்டம் கூட்டமாக மக்களை அழிக்கவும் முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இவர்கள் பார்ப்பனியக் குணம் படைத்த சூழ்ச்சிக்காரர்கள். பையப் பைய இனக் கொலை செய்வதுதான் நமது அரசின் திட்டம்.


நல்ல பழங்குடி யார்? செத்துப்போன பழங்குடிதான் என்பது மட்டுமல்ல இந்திய அரசின் கொள்கை. புலம் பெயர்ந்த பழங்குடிதான், ஊட்டச்சத்து இல்லாமல் மெலிந்துகிடக்கும் பழங்குடிதான், உரிமைகள் கேட்காத பழங்குடிதான், கண்ணியத்தைப் பறிகொடுத்த ஆணோ பெண்ணோ ஆகிய பழங்குடிதான், மனவுறுதி குலைந்த பழங்குடிதான், குப்பையில் வீசப்பட்ட பழங்குடிதான், சேரியில் கிடக்கிற பழங்குடிதான்... இவர்களே நல்ல பழங்குடிகள் என்பதும் கூட இந்திய அரசின் கொள்கைதான்.


நாம் மிகவும் நாசூக்கானவர்கள், அப்படியெல்லாம் சட்டென்று ஒருவரைக் கொன்று போட முடியாது. நாம் புலால் உண்ணாதவர்கள், பார்ப்பனியர்கள். அப்படிச் செய்ய மாட்டோம். தண்ட காரண்யத்தில் நடப்பவை செய்தியாவ தில்லை. ஏனென்றால் அவை வெறும் கொலைகள் மட்டுமல்ல. ஒரு பெரும் மக்கள் கூட்டமே நூற்றுக் கணக்கான ஆயிரக்கணக் கான மக்கள் - தங்கள் கிராமங்களுக்குச் செல்ல முடியாமலும், தங்கள் வயல்களில் சாகுபடி செய்ய முடியாமலும் அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குக் கல்விக் கூடங்கள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, எந்தவிதமான வசதிகளும் இல்லை. இந்த அவலநிலைக்கான பழி முழுவதும் மாவோயிஸ்டுகள் மீதே சுமத்தப்படுகிறது. ஆனால் மாவோயிஸ்டுகளே இல்லாத பழங்குடிப் பகுதிகளில் ஆய்வு செய்துள்ள மருத்துவர்களைக் கேட்டுப் பாருங்கள்.


இந்தப் பகுதிகளின் மக்கள் ஊட்டச் சத்தின்மை தொடர்பான எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். எய்ட்ஸ் எப்படி நோய் எதிர்ப்புத் திறனை அழித்து விடுகிறதோ, அதேபோல் ஊட்டச் சத்தின்மையும் இந்த மக்களின் நோய் எதிர்ப்புத் திறனை அடியோடு அழித்து, அவர்களை எல்லா வகை நோய்களும் தொற்றுவது எளிதாகி விடுகிறது. இதனால் ஒருவர் சாகவில்லை என்றால், இந்த நலிவு அடுத்தடுத்த தலைமுறைக்குப் பரவி உடல்நிலையை மோசமாக்கி விடும். இதைத்தான் பையப் பைய நடக்கும் இனக்கொலை என்கிறேன். இதுதான் அவர்களின் திட்டம்.


அந்தப் பகுதியைப் பாதுகாப்புப் படைகள் முற்றுகையிட்டுள்ளன. மக்கள் வெளியே வர முடியாது. அவர்களுக்கு உணவுப் பங்கீடு கிடைப்பதில்லை. பங்கீட்டுக் கடைகள் பாதுகாப்பு முகாம்களுக்குள் இருப்பதால் அவர்கள் அங்கே போக முடியாது. அவர்கள் கடைக்குப் போய் மருந்து வாங்க முடியாது. அது மூளை சார்ந்த மலேரியா அல்லது சாதாரண மலேரியா பரவியுள்ள பகுதி. விரைவில் அவர்களுக்கான உயிர்க்காற்று குறைந்து போய் அவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் வளர்கிறது.


உள்நாட்டுப் பாது காப்புக்கு மிகப் பெரிய ஆபத்து யார் என்று அண்மையிலே ஒரு செய்தியாளர் என்னைக் கேட்டார். என்னைப் பொறுத்த வரை, பேராசை பிடித்த நடுத்தர வர்க்கமும் மேல்தட்டு வர்க்கமும்தான் மிகப்பெரிய ஆபத்து என்று நான் பதிலளித்தேன்.


யார் பிரிவினைவாதிகள்? 
இந்தியாவில் இவர்கள்தான் மிகப் பெரிய பிரிவினைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருப்பவர்கள். இவர்கள் இந்த நாட்டை விட்டுப் பிரிந்து விண்வெளிக்குப் போய், அங்கிருந்து கீழே பார்த்துக் கேட்கிறார்கள்: “எங்கள், பாக்சைட்டுக்கு மண்ணில் என்ன வேலை? எங்கள் தண்ணீருக்கு ஆற்றில் என்ன வேலை? எங்கள் மரத்துக்குக் காட்டில் என்ன வேலை? அதையெல்லாம் எடுத்துக்கொடுங்கள்” என்கிறார்கள். மக்களைத் தேவைக்கதிகமானவர் களாகக் கருதுகிறார்கள். தேவைக்கதிகமாக உண்ணும் பெருந்தீனிக்காரர்களாக நினைக்கிறார் கள்.


நம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் உலகின் மிகப் பெரிய சுரங்கக் குழுமங்களில் ஒன்றாகிய வேதாந்தாவின் இயக்குநர் குழுவிலேயே இடம் பெற்றிருந்தவர். என்ரான் குழுமத்தின் வழக்குரைஞராக இருந்தவர். சுரங்கப் பெருங்குழு மங்களுக்காக எத்தனையோ முறை நீதிமன்றங்களில் வாதிட்டவர். இவர் நிதித் துறை அமைச்சராக இருந்த போது இந்தியாவுக்கான தனது இலட்சியக் கண்ணோ ட்டம் என்னவென்பதை அறிவித்தார். நாட்டின் 85 விழுக்காடு மக்கள் நகரங்க ளில் வாழ வேண்டும் என்பதே அது. 50 கோடி மக்களைக் கிராமப் புறங்களிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்பதே இதன் பொருள். காவல்துறையை ஈடுபடுத்தாமல், இராணுவத்தை ஈடுபடுத்தாமல் இதை உங்களால் செய்ய முடியுமா? முடியவே முடியாது. வெளியேற்றப்பட்ட பிறகு இந்த மக்கள் என்ன செய்வார்கள்? சேரிகளில் வசிப்பார்கள். அவர்களுக்கு யாரும் வேலை கொடுக்கப் போவதில்லை. நகரங்களில் இப்போது இருப்பவர்களுக்கே வேலை இல்லையே! மீண்டும் மீண்டும் அவர்களை வெளியேற்றிக் கொண்டே இருப்பீர்களா?


வெற்றி பெறுவோம் 
அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். கிர்பால் “சேரிவாசிகள் நம் சீர்மிகு நாட்டின் சேப்படிக்காரர்கள் (பிக்-பாக்கெட்டுகள்)” என்று கூறினார். மக்களைக் கிராமங்களிலிருந்து வெளியேற்றுவதும் நகரங்களிலிருந்து வெளி யேற்றுவதுமாகக் சுற்றிச் சுழல விட வேண்டியதுதான். ஏனென்றால் அவர்கள் தேவைக்கதிகமான பிறவிகள்! ஒழிந்து போக வேண்டியவர்கள்! நூறாயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டது பற்றி ஆட்சியாளர்கள் வருத்தப்படுவதாக நினைத்து விடாதீர்கள். அவர்களுக்கு வருத்தமில்லை. மேலும் பலர் இப்படிச் சாக வேண்டும், ஏழைகள் தொலைந்து போக வேண்டும் என்பதே அரசின் விருப்பம். 18,19ஆம் நூற்றாண்டுகளிலும் தென் அமெரிக்காவிலும் வட அமெரிக்காவிலும் கனடா விலும் நடந்ததற்கும் இங்கு நடப்பதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது: நாம் ஒரு சனநாயக நாடு என்று பாசாங்கு செய்து கொள்கி றோம். இது தன்னைத் தானே குடியேற்ற நாடாக்கிக் கொள்கிற சனநாயகம் தானே தன் உறுப்புகளைத் தின்ன முற்படுகிற சனநாய கம்; ஆனால் உறுப்புகள் தம்மைத் தின்னக் கொடுக்க மறுக்கின்றன. இந்தப் போர் புதியதன்று. இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதுதான் புதிய செய்தியாக இருக்கப் போகிறது. நம்மால் வெற்றி பெற முடியும்.


ஐந்தாண்டு காலமாக, உலகிலேயே மிகவும் ஏழ்மைப்பட்ட பஞ்சைப் பராரிகள் உலகிலேயே மிகப் பெரிய பன்னாட்டுக் குழுமங்களைக் கிஞ்சிற்றும் ஈவிரக்கமற்ற பன்னாட்டுக் குழுமங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்; முன்னேற விடாமல் முடக்கியுள்ளார்கள். இது இடர்ப்பாடுகள் நிறைந்த போராட்டமே என்றாலும், மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம் சனநாயகத்தில் ஒவ்வொரு நிறுவனமும் கெட்டுச் சீரழிந்து விட்டது. ஆனால் மக்களின் மனவுறுதி முறிந்து போகவில்லை. நாம் அவர்கள் பக்கம் நின்றாக வேண்டும். நாம் ஒதுங்கி நின்று நம்மால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை என்று கூற முடியாது. இலங்கையில் மக்கள் கொல்லப்படுவதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது போல் இப்போதும் இருந்து விடக் கூடாது. இது ஈவிரக்கமே இல்லாத அரசு. மக்கள் கொல்லப்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம் என்று நான் கூறியிருக்கக் கூடாது. அது தவறுதான். ஏனென்றால் காசுமீரில் மக்கள் கொல்லப்படுவதை நாம் தடுக்கவில்லையே! அங்கு எழுபத்தெட்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள் ளார்கள். வடகிழக்கில் பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, இந்திய அரசு சடலங்களை எண்ணுவதில் லை. ஆகவே, எத்தனைப் பேர் என்று நமக்குத் தெரியாது. மேற்கு வங்கத்திலும் ஆந்திரத்திலும் ஆயிரக்கணக் கான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டார்கள். இது கருணையில்லாத அரசு. 


ஊடகங்கள் 
 இந்த நாட்டின் ஊடகங்கள் பெரிதும் ஒத்துப் போகிறவையாக இருக்கின்றன. கெட்ட செய்தியை வெளியிடாமல் மறைத்து விடுகின்றன. நான் இங்கு பேசும் போதே, என்னை நக்சலைட்டு ஆதரவாளர் என்று முத்திரையிட்டு 'இவளைச் சிறையில் போடு" என்று சொல்ல விரும்புகின்றன. சிறை செல்லும் ஆசை எனக்கும் இல்லை. நான் ஒன்றும் ஈகியல்லேன். நான் கருத்துகளில் நம்பிக்கை கொண்டுள்ள எழுத்தாளர். எதிர்ப்பியக்கத்தின் நன்மைக்காகவே கூட நமக்கு நாம் கடினமான கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என நம்புகிறேன். 'காந்தியவாதிகள் தொடங்கி மாவோயிஸ்டுகள் ஈறாக எதிர்ப்பியக்கத்தின் பல் வண்ண அணிவகுப்பு என்று கூறி வருகிறேன் அல்லவா" அந்த அணிவகுப்பில் காந்திய வாதிகளிடம் புரட்சிகர இலட்சியக் கண்ணோட்டம் இருக்கவே செய்கிறது என்று சொல்லலாம். வேண்டுமானால், பெருங்குழும இராணுவக் கொடுந்தாக்குதலுக்கு முகங்கொடுப்பதற்கான புரட்சிகர உத்தி அவர்களிடம் இல்லை எனலாம்.


ஆனால் மாவோயிஸ்டுகளின் இலட்சியக் கண்ணோட்டம் முழுக்க முழுக்கப் புரட்சிகரமானது என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. இன்று அவர்கள் காடுகளுக்குள் துரத்தப்பட்டிருப்பதற்கு இந்திய அரசின் அழித்தொழிப்புக் கொள்கையே காரணம். அவர்களைப் பூண்டோடு அழிக்க விரும்புவதால் அவர்கள் காடுகளுக்குள் பின்வா ங்கிச் சென்றுள்ளார்கள். மாவோயிஸ்டுகள் தமது வரலாற்றில் எப்போதுமே பழங்குடிப் பகுதிகளில் தான் மிகவும் வலுவாக இருந்துள்ளார்கள். ஆனால், இன்று பழங்குடிப் பகுதிகள் மீது சுரங்கக் குழுமங்களும் அகக்கட்டமைப்புக் குழு மங்களும் கொடுந்தாக் குதல் தொடுத்துள்ளன. பழங்குடி மக்கள் இதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாவோயிஸ்டு களுக்கென்று அரசின் சுரங்கக் கொள்கைக்கு மாறான ஒரு சுரங்கக் கொள்கை உண்டா? 


சுரங்கமும் சுற்றுச் சூழலும் 
 சுற்றுச் சூழலியல் சார்ந்து சுரங்கம் வெட்டுவதில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்பது போல் நாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. சுற்றுச் சூழலியல் சார்ந்து பாக்சைட்டு; வெட்டியெடுக்க முடியுமா என்றால் முடியாது. ஓரிசா மலைகளில் புதைந்துள்ள பாக்சைட்டின் மதிப்பு 4 திரிலியன் (நாலாயிரம் கோடி கோடி) டாலர் ஆகும். இவ்வளவு பெருந்தொகை கிடைக்கும் என்பதால்தான் இராணுவத்தை அழைக்க நினைக்கிறார்கள். ஆனால் அந்தப் பாக்சைட்டு மலைகளைப் பொருளியல் வகையில் மதிப்பிடவே முடியாது. ஏனென்றால் அந்த மலைகள் நீர் தேக்கி வைத்திருப்பவை. ஓவ்வொரு நாளும் அந்தத் தண்ணீர் பள்ளத்தாக்குகளுக்குப் பாய்கிறது. அந்தப் பகுதியின் சுற்றுச் சூழலை இவ்வாறு இம்மலைகள் பேணிக் காக்கின்றன.


சுற்றுச் சூழலைக் கெடுக்காமல் பாக்சைட்டு எடுக்க முடியாது. பெரிய அணைகள் கட்டி மின்சாரம் இயற்றாமல் பாக்சைட்டை அலுமினாவாகவும் அலுமினாவை அலுமினியமாகவும் மாற்ற முடியாது. அலுமினியம் தயாரிக்கும் செயல்முறைதான் உலகிலேயே மிகவும் நச்சுத் தன்மையும் அழிவுத் தன்மையும் வாய்ந்த தொழிற் செயல்முறையாகும். சுற்றுச் சூழலியல் சார்ந்து அலு மினியம் தயாரித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்கள் தயாரிக்கும் அலு மினியம் நேராகப் படைசார் தொழில் துறைக் கட்டமைவுக் குள் போய்விடும். நேராகப் போர் இயந்திரத்துக்குள் போய்; ;விடும். நமக்கு நாமேயும் கேள்வி கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். என்னைப் போன்றவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நான் இங்கே நிற்பது உங்களுக்கோ வேறு எவருக்கு மோ சங்கடமில்லாமற் செய் வதற்காக அல்ல. அது என் வேலையில்லை. சங்கடமான கேள்விகளைக் கேட்பதும,; என்ன நடக்கிறது இங்கே என்று வினவுவதும்தான் என் வேலை.


ஆனால் நான் கோட்டின் இந்தப் பக்கம் இருக்கிறேன். பெருங்குழும வன்பறிப்பை எதிர்க்கும் எதிர்ப்பியக்கத்தின் பக்கம் இருக்கிறேன். இந்தப் பக்கம்தான் இருக்கிறேன். கோடானுகோடி டாலர் மதிப்புள்ள கனிம வளங்கள் - இரும்புத் தாது, பாக்சைட்டு, மாங்கனீஸ், தங்கம், வைரம், மாணிக்கம் போன்றவை - இருக்கும்போது இதிலிருந்து கிடைக்கக் கூடிய பணம் மலையளவு பெரிது. இந்தப் பணத்தைக் கொண்டு அரசுகளையே விலைக்கு வாங்கலாம். ஊடகங்களை வாங்கலாம்; நீதிபதிகளை வாங்கலாம்;: தேர்தல்களையும் வாங்கலாம். பத்தாயிரக்கணக்கான கோடிகளில் அரசியல் ஊழல் முறைகேடுகள் நடப்பதை அறிவீர்கள். இந்தப் பணம் ஏது? எங்கிருந்து வருகிறது? பாக்சைட்டு மலைகளிலிருந்து வருகிறது. இரும்புத் தாதுவிலிருந்து வருகிறது. ஊகப் பங்கு வணிகத்திலிருந்து வருகிறது.


அரசு இன்று இந்தத் தனியார் குழுமங்களுக்குச் சுரங்க ஒப்பந்தங்கள் வழங்குகிறது. இரும்புத் தாது டன் ஒன்றுக்கு உரிமைக் கட்டணமாக அரசுக்குக் கிடைப்பது 24 ரூபாய் மட்டுமே. ஆனால் இதைக்கொண்டு தனியார் குழுமம் ஈட்டுவது 5,000 ரூபாய். கோடிக் கணக்கான டன்களுக்கு இந்த ஒப்பந்தங்கள் வழங்கப் படுகின்றன. அதனால்தான் இங்கே பெல்லாரிக் குடியரசு ஆள முடிகிறது. மது கோடா வளர முடிகிறது. இந்தப் பெருங் குழுமங்களிடமிருந்து காசு வாங்கிச் செயல்படும் தொலைக் காட்சிகள் உள்ளன. இந்தத் தொலைக்காட்சிகள் எந்தக் கேள்வியும் கேட்கப் போவ தில்லை. அவர்களால் தேர்தலையே விலை கொடுத்து வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 


அரசியல் கட்சிகள் 
 பாரதிய சனதாக் கட்சியும் காங்கிரசும் அண்ணா திமுகவும் திமுகவும்தான் கட்சிகள் என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை, இவையல்ல கட்சிகள். டாட்டாவை எதிர்க்க அம்பானி, அம்பானியை எதிர்க்க மிட்டல், மிட்டலை எதிர்க்க மற்றொருவர்… உண்மையில் இவையே கட்சிகள். இந்தப் பெருங்குழுமங்களுக்கு ஆதரவாக ஆயுதப் படைகளே உள்ளன. சத்திஸ்கரில் சல்வா ஜுடும், மேற்கு வங்கத்தில் ஹர்மா படை, ஒரிசாவில் பாஸ்து குண்டர்கள் அல்லது டாட்டா குண்டர்கள் என்றவாறு உள்ளன.


ஆனால், இந்த உள்நாட்டுப் போர்ச் சூழலை நாம் சமாளித்தாக வேண்டும். மிகவும் கெட்டிக்காரத்தனமாக இதற்குள் நுழைந்து வெளிவர நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். காட்டுக்குள்ளே உங்களை ஒரு துப்பாக்கிக் குண்டு தாக்கலாம். ஆனால் காட்டுக்கு வெளியே உங்களுக்குச் சிறை உண்டு, ஊடகங்களில் உங்களைத் திசை திருப்பும் வழிகள் உண்டு. இவற்றை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? வன்முறையா, அகிம்சையா என்ற வினாவைத் திரும்பத் திரும்ப அவர்கள் நம்முன் எழுப்பி வருவது கருத்துக்குரியது. இது இயக்கங்களைப் பிரிக்கும் முயற்சியாகும். இந்த இயக்கங்கள் ஒன்றை ஒன்று குற்றஞ் சொல்லிக் கொண்டிருக்கவில்லை, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கவில்லை. மேதா பட்கர் மாவோயிஸ்டுகளைக் கண்டிக்கவில்லை. மாவோ யிஸ்டுகளும் மேதா பட்கரைக் கண்டிக்கவில்லை. பத்திரிகையாளர்களும் பத்திரிகைகளும் உரிமை வாதிகளும்தான் குறுஞ்செய்திக் கருத்துக்கணிப்பு நடத்துவதும் தொலைக்காட்சி வழி அறநெறி போதிப்பதுமாய் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.


எதிர்ப்பியக்கத்தின் பன்மை 
இவர்கள் அனைவரும் தமக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், இந்த வேறுபாடுகள் எவ்வளவு கடுமையானவையாக இருந்தாலும், ஒரே பெருங்குழுமக் காட்டாதிக்கத்தை எதிர்த்தே, ஒரே பெருங்குழுமப் படையெடுப்பை எதிர்த்தே போராடுகிறோம் என்பதை நன்கறிவார்கள். மக்கள் தங்கள் போராட்ட உத்திகளை வெறும் கருத்தியல் அடிப்படையில் வகுப்பதில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். காட்டாக, நர்மதைப் பள்ளத்தாக்கில் ஆயுதப் போராட்டம் நடத்த முடியாது. அங்கு யாருடன் சமர் புரிவது? உங்கள் வீட்டை மூழ்கடிக்கும் ஆற்று நீருடனா? இதே போல், அடர்ந்த காட்டுக்குள், ஊர்விட்டு ஊர் செல்லவே பல நாள் ஆகும் போது, ஊரைச் சுற்றி மையச் சேமக் காவல் படையும், சத்தீஸ்கர் காவல்துறையும் நிற்கும் போது, உங்களால் என்ன செய்ய முடியும்? உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியுமா? தொடர் முழக்கப் போராட்டம் நடத்த முடியுமா? உங்கள் பேச்சைக் கேட்பது யார்?


காந்தியப் போராட்டம் நடத்துவதானால் பார்க்கவும் கேட்கவும் ஆள் வேண்டும். காட்டில் இதற்கு வழியில்லை. மேலும், பட்டினி கிடப்பவன் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? பணம் இல்லாதவர்கள் வரிகொடா இயக்கமோ சரக்குப் புறக்கணிப்போ நடத்த முடியுமா? என்று நீங்கள் கேட்டுப் பாருங்கள். அவர்களிடம் எதுவும் இல்லை, பணம் இல்லை. பார்க்கவும் கேட்கவும் அவர்களுக்கு யாருமில்லை. அவர்கள் என்னதான் செய்யமுடியும்? மாவோயிஸ்டு என்றும் காந்தியவாதி என்றும் வேறு பலவாறும் செய்யப்படும் இலக்கண வரையறைகள் எல்லாம் களத்தில் அவ்வளவு தெளிவானவை யாகவோ அவ்வளவு தூயவையாகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்களே சாலையில் காந்தியவாதியாகவும் காட்டில் மாவோயிஸ்டாகவும் இருக்கலாம். அவர்கள் நமக்கு இந்த வரையறைகளைச் செய்தளிக்க விடக் கூடாது. நம் மண்டைக்குள்ளிருக்கும் சிந்தனைத் திறனை நாம் கைவிடத் தேவையில்லை. நீ எங்கள் பக்கம் இருக்கிறாய், இல்லையென்றால் பயங்கரவாதிகளின் பக்கம் இருக்கிறாய் என்;பது போன்ற மிரட்டல்களுக்கு நாம் அஞ்சத் தேவையில்லை.
 நான் தண்டகாரண்யத்தில் காட்டுக்குள் செல்வதற்கு முன் தந்தேவாடா காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் 18 நக்சலைட்டுகளை என் வீரர்கள் கொன்று விட்டார்கள் என்று படத்தைக் காட்டினார். இளம் வயதினர், இளம் பழங்குடிகள் 18 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் எழுவர் இருபது வயதுக்குட்பட்ட பெண்கள,; தலையில் பூ வைத்திருந் தார்கள். நான் கேட்டேன்: அவர்கள் நக்சலைட்டுகளாகவே இருக்கலாம். ஆனால் இந்தப் படத்தை வைத்து அவர்களை நக்சலைட்டுகள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நெற்றியில் 'நான் நச்சலைட்டு' என்று எழுதி ஒட்டிவைத்துள்ளார்களா, என்ன? 'பாருங்கள், அம்மா, அவர்கள் எங்களிடம் இருக்கக் கூடிய மலேரியா மருந்தும் டெட்டால் போத்தலும் வைத்திருந்தார்கள்". ஆகவே, மாவோயிஸ்டு என்பதற்கு இது ஒரு வகையான விளக்கம். 


பேராசை வழி 
பிறகு அவர் சொன்னார்: “நம்மால் காவல் துறையையும் இராணுவத்தையும் பயன்படுத்தி இந்தப் போரில் வெற்றி பெற முடியாது. நாம் வெற்றிபெற ஒரே வழி இம்மக்களுக்குப் பேராசையின் பொருளைக் கற்றுத் தருவதுதான்.” ஏனென்றால் பேராசை என்றால் என்ன என்றே அவர்களுக்குப் புரியாது. வீட்டுக்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுங்கள், போரில் வென்று விடலாம். இங்கே அரசியல் கட்சிகள் இதையே செய்து வருவதாக எனக்கு ஒருவர் நினைவுப்படுத்தினார். மக்களைக் கவரும் தொலைக் காட்சியைக் கொண்டு போரில் வென்று விடலாம். மாவோயிஸ்டு என்றால் யார் என்பதற்கு இப்படி விதம் விதமாக விளக்கம் தரப்படுகிறது. இறுதியில் அந்தக் கிராமங்களில் மக்களுக்கு என்ன நேரிட்டது, பாருங்கள்.


அந்தக் காவல் துறைக் கண்காணிப்பாளர் சொன்னார்:
“யாரெல்லாம் வெளியே வந்து காவல்துறை முகாம்களில், அல்லது சல்வா ஜுடும் முகாம்களில், வசிக்கவில்லையோ அவர்கள் எல்லாம் மாவோயிஸ் டுகளே.” அதாவது யாரெல்லாம் கோழி மேய்த்துக் கொண்டிருக்கிறார்களோ, யாரெல்லாம் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வயலில் நின்று கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்று பொருள். தண்டகாரண்யத்தில் பயங்கரவாதத்துக்கு இதுவே இலக்கண வரையறை.


செப்;டெம்பர் 11 (இரட்டைக் கோபுரத் தகர்ப்பு) நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் நெடுந்தொலைவு வந்து விட்டோம். இராணுவத்தை அழைப்பது பற்றியும், வான் படையைத் துணைக் கொள்வது பற்றியும் நேற்று கூட பேசியுள்ளனர். இதற்கு என்ன பொருளோ, யாமறியோம். ஏழைகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகச் சுடுவதாம்! இதை நாம் அனுமதிப்பதுபோல் பெரிய வெட்கக் கேடு எதுவும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, உலகிலேயே மிகவும் வறுமைப்பட்டவர்களும் ஊட்டங்;குறைந் தவர்களும், ஏதுமற்றவர்களுமான மக்களுக்கு எதிராகப் படை நடத்துவதை அனுமதிக்கலாமா? இதுதான் நாட்டு நலன் என்றால், இப்படித்தான் நம் நாடு இருக்கும் என்றால், இது நம்மை பாசிஸ்டுகள் ஆக்கி விடக் கூடியது. இதை எண்ணி இரவில் நம்மால் தூங்க முடியவில்லை. தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தோமே என்று கூட வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம். நாம் வாக்களிக்கக் கூடாது. வேறொன்றும் செய்ய முடியாவிட்டாலும் வீட்டிலேயே இருந்து விடுங்கள். அதுவே மனித குலத்துக்குச் செய்யும் உதவியாக இருக்கும். 


முதலாளிய முற்றாதிக்கம் 
முடிவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது முதலாளியம் போல் முற்றாதிக்கத் தன்மையுள்ள கருத்தியல் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. ஏனென்றால் தன் கூடவே முதலாளியமல்லாத ஒரு சமூகமும் ஒருங்கே நிலவுவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது. இன்று முதலாளியமல்லாத ஒரே சமூகம் பழங்குடிச் சமூகம் மட்டுமே. தெற்காசியாவில் என்ன நடக்கிறது? ஆப்கானிஸ்தான் முதல் வசிரிஸ்தான் வரை, பழங்குடி மக்கள் வாழும் இந்தியாவின் வடகிழக்கிலும், சிவப்புத் தாழ்வாரம் எனப்படும் பகுதி முழுக்கவும் ஒரு கொடுந்தாக்குதல் நடக்கக் காண்கிறோம். இதற்கான எதிர்ப்பியக்கம் வௌ;வேறுவிதமாக வடிவம் கொள்கிறது. அது ஆப்கானிஸ்தானில் தீவிர இஸ்லாமாகவும், இந்தியாவில் தீவிரக் கம்யூனிசமாகவும் இருக்கலாம். ஆனால் தாக்குதல் என்பது இயற்கைச் செல்வாதாரங்களைக் கைப்பற்றுவதற்கான பெருங்குழுமத் தாக்குதலே.


ஆகவே, இதை எப்படிப் பார்க்கப் போகிறோம்? என்னைப் பொறுத்த வரை நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன். கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் நம்மில் சிலரால் செய்ய முடியாமலிருந்ததைப் பச்சை வேட்டை நடவடிக்கை செய்து விட்டது. அது பெருங்குழும வட்டாரங்களின் முகத்திரையைக் கிழித்து விட்டது. பெரும்புள்ளிகளை அவர்களின் சொகுசான, மேலாண்மை அறைகளிலிருந்து வெளியே இழுத்து வந்து விட்டது! அவர்கள் வெளியே வந்து போர்க் கருவிகளேந்திக் கொலை செய்வதற்கு முனைந்து நிற்கிறார்கள். தெலங்கானாவில் குழந்தைகளைக் கூட ஒட்டுப் படைகள் கொலை செய்தன. இந்தப் படைகள் இந்திய அரசின் படைகள் அல்ல. இவை பெருங்குழுமப் பேரரசின் கூலிப்படைகள் ஆகும். ஆகவே, பச்சை வேட்டை நடவடிக்கையானது அநேகமாய் அனைவருக்குமே நிலைமைகளைத் தெளிவாக்கிய அளவில் நமக்கு உதவியுள்ளது. 


வெற்றி முக்கியம் 
ஆனால், இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவதன் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தண்டகாரண்யக் காட்டிலும், லால்கரிலும். ஜார்க்கண்டிலும் நம்மால் வெற்றி பெற முடியும் என்றால், முதலாளிய இயந்திரத்தைப் பார்த்து நில் என்று சொல்ல முடியும், உனக்கு எதுவும் தர மாட்டோம் என்று சொல்ல முடியும். வேறுவிதமாகச் சிந்திக்கும் முறைக்கு இடமளித்தாக வேண்டும் என்று கேட்க முடியும். இந்த வெற்றியின் தொடர்ச்சியாகப் பிற வெற்றிகளை அடைய முடியும். ஏனென்றால் இன்று நாம் போராடுவது பாரதிய சனதா குறித்தோ காங்கிரஸ் குறித்தோ மார்க்சிஸ்டுகள் குறித்தோ மாவோயிஸ்டுகள் குறித்தோ அல்ல, மானுடத்தின் வருங்காலத்தை மாறுபட்ட வழியில் வடிவமைப்பது குறித்தும், மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் மாறுபட்டதோர் இலக்கணம் வகுப்பது குறித்தும,; இயற்கையோடு இயைந்து வாழ்வதின் வாய்ப்பு குறித்தும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் நாம் வெற்றி பெற வேண்டும். எப்படியோ தோற்றுப் போனால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம். 


பழங்குடித் தாயகங்கள் 
இறுதியாக, நான் எழுதிய ஒன்றைப் படித்துக் காட்டி நிறைவு செய்ய விரும்புகிறேன்: ஆசியத் துணைக் கண்டத்தின் குறுக்கே ஆப்கானிஸ்தான் முதல் வசிரிஸ்தான் ஊடாகப் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணம் வரை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஊடாக, சிவப்புத் தாழ்வாரம் எனப்படுகிற நிலப்பரப்பு வரை பழங்குடிப் பகுதிகள் கிளர்ந்தெழுந்து போராடுகின்றன. இந்த எழுச்சியின் இயல்பு ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தீவிர இஸ்லாமாக வடிவெடுத் துள்ளது. இந்தியாவின் காடுகளடர்ந்த இதய பூமியில் அது தீவிரக் கம்யூனிசமாக வடிவெடுத்துள்ளது. ஆனால் இந்தப் பழங்குடித் தாயகங்கள் மீதான கொடுந்தாக்குதல் தடையிலா வணிகச் சந்தையால் தூண்டப்படுகிறது. ஆனால் முதலாளியியம் இயற்கைச் செல்வாதாரங்களாகக் கருதுகிறவற்றைக் கைப்பற்றிக் கட்டுப்படுத்த வேட்கை கொண்டு இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. நீடித்த போருக்கே வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது. இதற்கொரு மாற்று வழி முதலில் இந்த நெருக்கடியைப் புவிக்கோளுக்குக் கொண்டுவந்து சேர்த்த அந்தக் கற்பனைத் திறனிலிருந்து வரும் என்பது மிகையான எதிர்பார்ப்பாகவே இருக்கும். பச்சை வேட்டை நடவடிக்கை போன்ற போர்களின் நோக்கம் உண்மையிலேயே தன்னிறைவான வாழ்க்கை முறைகளின் இரகசியங்களை அறிந்திருப்பவர்களை ஒழித்துக் கட்டுவதே ஆகும்.


இந்தப் போரை நடத்துகிறவர்கள் வென்று விடுவார்களானால், அந்த வெற்றியானது ஆதிவாசி மக்களுக்கு மட்டுமல்ல, இறுதியில் மனிதகுலத்துக்கே ஒரு பிரளயப் பேரழிவின் விதைகளைத் தன்னுட் கொண்டிருக்கும். கொடிய முறையில் குளறுபடியாகிவிட்ட உலகத்தை வேறுவிதமாகக் கற்பனை செய்து பார்ப்பது நோக்கிய முதல் படி என்பது வேறுவிதமான கற்பனை கொண்டிருப்பவர்களை ஒழித்துக் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதுதான். இந்தக் கற்பனை முதலாளியத்துள் அடங்காது, அதேபோல் பொதுவுடைமைக்குள்ளும் அடங்காது. மகிழ்ச்சி என்றால் என்ன, மனநிறைவு என்றால் என்ன என்பதை அறவே மாறுபட்ட முறையில் புரிந்து கொள்ளும் கற்பனையே அது. இந்த இறுதியான வெற்றியை அடைய வேண்டுமானால், யார் நம் கடந்த காலத்தின் காவலர்களைப்போல் தோன்றக் கூடுமோ, யார் உண்மையில் நம் வருங்காலத்தின் வழிகாட்டிகளாக இருக்கக் கூடுமோ, அவர்கள் உயிர் பிழைத்து வாழ்வதற்கு ஒரு பௌதிக இடைவெளியை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதைச் செய்ய வேண்டுமானால், நாம் கேட்க வேண்டிய கேள்விகள்:


நீரை ஆறுகளிலேயே விட்டுவிடுவோமா?
மரங்களைக் காடுகளிலேயே விட்டுவிடுவோமா?
பாக்சைட்டையும் தாதுப் பொருட்களையும் மலைகளிலேயே விட்டு விடுவோமா?


நம்மால் அப்படி விட்டு விட முடியாது என்றால் நாம் இந்தப் போரினால் பாதிக்கப்படுகிறவர்களிடம் ஒழுக்கம் பற்றிப் பேசுவதை நிறுத்தி விட வேண்டும்.
நன்றி