புரட்சியின் விதை மாமேதை அம்பேத்கர்
- இயக்குநர் பாலமுரளி வர்மன்
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் இல்லாத விடுதலை என்பது போலித்தனமானது. அண்ணல் அம்பேத்காரின் அறைகூவலை நம் நெஞ்சில் ஆழமாக பதிக்கிறது இந்த திரைப்படம்.
திரைப் படைப்பு எனும் வலிமை மிகு ஊடகத்தை வெகு பொறுப்போடு பயன்படுத்தி இருப்பதன் வழியாக இந்திய திரை உலகில் மிகவும் மரியாதைக்குரிய இடத்தை அடைந்திருக்கிறார் இயக்குனர் ஜப்பார் படேல்.
படைப்புக்கான நேர்மையிலிருந்து சிறிதும் பின் வாங்காமல் எந்த சமரசத்துக்கும் ஆட்படாமல் எவருக்கும் அஞ்சாத துணிவோடு அம்பேத்காரை வெளிக்கொணர்ந்திருப்பதன் மூலம் இப்படைப்பின் முதல் நாயகனாக திகழ்கிறார் இயக்குனர்.
ஈழத்துயரம், ஸ்பெக்ட்ரம், வெங்காயம், பூண்டு விலையேற்றம் காங்கிரஸின் கயமை... எல்லாவற்றிலிருந்தும் நம்மை விடுவித்து (தற்காலிகமாகத்தான்) நூறாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று விடுகிறார்கள் ஒளிப்பதிவாளரும் கலை இயக்குனரும்.நமது நிகழ்காலத்துக்கும் கதை நிகழும் காலத்துக்கும் பாலமாக இருப்பது காங்கிரஸின் கயமைத்தனம்.
மகாத்மாவாக வெளியுலகுக்கு அடையாளப்படுத்தப்பட்ட மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி எனும் அரசியல்வாதியின் சந்தர்ப்பவாத முகமும் ,வர்ண பேதங்கள் மண்டி கிடக்கும் அவரது மனமும் ஒளிவு மறைவின்றி அம்பலப்படுத்தப்பட்டு "மகாத்மா" முகமூடி கிழித்தெறியப்படும்போது நூறாண்டு காலமாக நம் தலைமுறைகள் தாங்கிக் கிடந்த கண நேரத்தில் அகற்றப்பட்டு நமது சுவாசம் சீராகிறது.
காந்தியார் விடுதலைக்காக அரும்பாடுபடுவதான தோற்றத்தில் மக்கள் வெள்ளையனுக்கு எதிராக கொந்தளித்துவிடாமல் தடுக்கின்ற சேவையை செவ்வனே செய்திருக்கிறார் என்பதும் சர்க்காருக்கு எதிராக செயல்படுபவர்களை சுட்டிக்காட்டும் ஆங்கிலேய முகவராக செயல்பட்டிருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
உண்ணாவிரதம், அறிக்கை விடுவது, மனு எழுதுவது, கடிதம் எழுதுவது-காரியம் மீறினால் பொறுப்பிலிருந்து விலகிவிடுவேன் அல்லது ஓய்வு பெற்றுவிடுவேன் என்பதான காந்தியின் அத்தனை அரசியல் தந்திரங்களையும் இன்றைக்கும் சிலர் பின்பற்றுவதை படம் பார்க்கும்போதே நம்மால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் துணையோடு தயாராகியிருக்கும் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு உலகிலேயே மிகப்பெரிய சனநாயக நாடென பறைசாற்றப்படும் இந்தியாவில் வெளியாவதற்கும் மற்றைய மாநில மொழிகளில் மாற்றம் செய்யப்படுவதற்கும் பத்தாண்டு காலம் ஆகியிருக்கிறது.காரணம் அப்படைப்பின் ஊடாக அறைந்து சொல்லப்படும் உண்மை.
எத்தனையோ தலைவர்களின் வரலாறுகளும் தனி மனித வாழ்க்கையும் திரைப்படமாக்கப்பட்டிருந்தாலும் எல்லாவற்றிலிருந்தும் இத்திரைப்படம் உயரிய சிறப்பை கொண்டிருக்கிறது என்று நாம் கருதுவதற்கு காரணம் முதன்முதலாக ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின் பார்வையிலிருந்து அந்த ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து உருவான தலைவனது நியாயமான நிலையிலிருந்து உண்மைகள் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.
ஆதிக்கத்தின் குரலே எப்போதும் ஓங்கி ஒலிக்கிறது.அடித்தட்டிலிருந்து எழும் ஓலங்கள் அமுங்கிப்போய்விடுகின்றன. அல்லது அமுக்கப்பட்டுவிடுகின்றன. அதனால்தான் இத்திரைப்படம் வெளியாக இத்தனை ஆண்டுகள்.அரசின் ஏவல் துறையான தணிக்கை துறையின் அடக்குமுறை வெட்டிலிருந்து தப்பித்தவையே நமக்கு காணக்கிடைக்கும் கனல் கக்கும் காட்சிகள்.எவ்வளவுதான் கட்டிக்காத்தாலும் காலம் கதராடைகளை கந்தலாக்கிவிடும் என்பது தெளிவாக உணர்த்தப்படுகிறது.அவர்கள் ராட்டைகளில் நூற்பது சிலந்தி வலைகளைத்தான்.
அண்ணலின் பிறப்புக்கு முன்னிருந்தே காலம் காலமாக இங்கு நிகழ்த்தப்பட்ட தீண்டாமை கொடுமைகளை ஓவியங்கள் வாயிலாக பார்வையாளனுக்கு சொல்வதிலிருந்து துவங்குகிறது,ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த அந்த மக்கள் தலைவனின் மகா வரலாறு.
கடவுல் பெயரால்,மதத்தின் பெயரால் மனித மன விகாரங்கள் கட்டியெழுப்பிய மற்ற எல்லா பேதங்களின் பெயராலும் புண்படுத்தப்பட்ட மகார் இனத்தில் உதித்தது அந்த மானுட உன்னதம்.வரிசைகட்டிய கொடுமைகளாலும் வாட்டி வதைக்கும் வறுமையாலும் சிதைக்கப்பட்ட வாழ்க்கையே அண்ணலுக்கு அடிப்படையாய் அமைகிறது.ஆயினும் மகனை படிக்க வைத்து விட வேண்டும் என்ற வேட்கை தந்தை ராம்ஜிக்கு ஆக்க ச்க்தியாய் உந்தித் தள்ளுகிறது.சிறு பிராயத்திலேயே சகிக்க முடியாத சாதியக்கொடுமைகள் சகமனிதர்களால் அவருக்கு அறிமுகமாகிறது.அது டாக்டர் அம்பேத்கர் ஆன பிறகும் மதவெறியர்களால் தொடர்கிறது.
பரோடா மன்னரின் உதவியோடு கொலம்பியா பல்கலையில் படிப்பதற்காக போனால் அங்கேயும் பரிகாசம். பட்டம் பெற்று பரோடா சமஸ்தானம் திரும்பினால் அங்கிருக்கும் கடைநிலை ஊழியனின் கண்களும் அவரை பூமியின் கடைசி புழுவை பார்ப்பது போல் பார்க்கும் கொடூரம்.அவர்கள் குடிக்கும் தண்ணீரை அம்பேத்கர் குடிக்க கூடாது ஆதிக்கசாதியின் ஆணை.நாளுக்குள் அவரது இதயம் புடம் போடப்படுகிறது.தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடுதியில் தங்க அனுமதியில்லை.பார்ஸிகள் கூடிக்கொண்டு தாக்க வருகின்றனர்.இந்த கொடுமைகளை எப்படி எதிர்ப்பது?இது பற்றி என் மக்களுக்கு எவ்வாறு விழிப்பூட்டுவது? 1920 சனவரியில் பிறக்கிறான் மூக்நாயக்(ஊமை நாயகன்)பத்திரிக்கை.
எழுதினால் போதாது பேசினால் போதாது எல்லாவற்றுக்கும் விடைகாண வேண்டும். எம்மக்களை இந்த அடிமைக்கேட்டிலிருந்து விடுவிக்க வேண்டும். முடிவெடுக்கிறார். உருவாகிறது தீண்டாமையை கொளுத்தும் தீப்பந்தம். எல்லோருக்கும் கல்வி எனும் முழக்கம் பகிஷ்கிரித் கிதகாரிணி எனும் அமைப்பு. இதன் நோக்கம் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி பயில வேண்டும்.அவர்களது வறுமை ஒழிய வேண்டும்.முக்கியமாக அவர்கள் தங்குதடையின்றி தங்குவதற்கு விடுதிகளில் உள்ள தடை நீங்க வேண்டும்.மகார் இன மக்களை மீண்டும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும்.தேசமெங்கும் கொந்தளிக்கிறது.அடக்கப்பட்டவர்களின் குமுறல்.திணறுகிறது ஆதிக்க வெறியர்களின் அரசியல்.
"மகாத்" மாநாட்டில் புரட்சி நெருப்பை பற்ற வைக்கிறார்.
சௌதார் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீரை பருகக்கூடாது என்ற தடை உடைக்கிறார்.மக்களை திரட்டி அவர் மாபெரும் ஊர்வலமாக சென்று அவரே களம் இறங்கி குளம் தொடுகிறார்.ஆலயப்பிரவேசம் எங்கள் உரிமை ஆண்டவனை பார்ப்பது எனது நோக்கமில்லை அனுமதி மறுக்கும் உரிமை யாருக்குமில்லை எம்மை விரும்பாத கடவுள் எங்களுக்கு வேண்டாம்.ஆனால் நாங்கள் நாய்கள் அல்ல மனிதர்கள் என்பதை நிலை நாட்டவே ஆலயப்பிரவேசம் என்ரு அனலாய் நுழைகிறார் அம்பேத்கர்.சதிகாரர்கள் கற்களை வீசி கலைத்திடமுனைய சளைக்கவில்லை சட்டமேதை.
சைமன் குழுவை காங்கிரஸ் எதிர்த்தபோது அம்பேத்கர் ஆதரவு நிலை எடுக்கிறார்.குழுவின் முன் நின்று தன் மக்களுக்காக பேசினார்.ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனி தொகுதி ,கல்வியில் இட ஒதுக்கீடு,சிறுபான்மையினருக்கு சலுகைகள் என்று சாட்டை வீசியதில் காந்தியின் நிம்மதி பறி போகிறது.உண்ணாவிரதம் அறிவித்துவிட்டு படுத்துக்கொள்கிறார்.நாடே ஸ்தம்பிக்கிறது.அம்பேத்கர் காந்தியை சந்திக்கிறார்."அடிக்கடி உண்ணாவிரதம் எனும் ஆயுதத்தை கையிலெடுக்காதீர்கள் பாபுஜி உங்கள் உயிர் முக்கியம்"என்று கூறிவிட்டு உடன்படுகிறார். காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே நிகழும் உரையாடல்களும் காந்தியை பற்றிய வசனங்களும் திரையரங்கை அதிரச்செய்கின்றன. போராட்டம் ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாய் கொண்டு மக்களுக்காக வாழ்ந்தவருக்கு உடல் நிலையில் அக்கறை செலுத்த நேரமில்லாது போகிறது.மருத்துவர் ஓய்வை அறிவுறுத்துகிறார். வைத்தியம் செய்ய வந்த மருத்துவர் சாரதா கபீர் அம்பேத்கரின் மீது அக்கறை கொள்கிறார். ஐம்பத்திஆறாவது வயதில் இரண்டாவது திருமணம்.
இந்தியா விடுதலை பெற்றதும் அண்ணல் அம்பேத்கர் சட்ட அமைச்சராகிறார். சட்டமியற்றும் குழுவின் தலைவராக தனியொரு மனிதனாக ஊண் உறக்கமின்றி இரவு பகல் மறந்து இந்த இந்திய துணை கண்டத்தின் அரசியலமைப்பு சட்டதினை உருவாக்குகிறார் அண்ணல்.
இந்து சட்ட திருத்த முன் வடிவில் பெண்களுக்கு சொத்தில் பங்கு,விதவை மறுமணம்,உடன் கட்டை ஏற தடை என முற்போக்கு சட்டங்கள்.காங்கிரஸில் கடும் எதிர்ப்பு எழவே படஹ்வியை வீசிவிட்டு வெளியேறுகிறார்.
இந்து மதமெனும் பழங்கூடாரத்தில் மண்டிக்கிடக்கும் காழ்ப்புணர்ச்சி, மதமாச்சார்யம், தீண்டாமை, சாதிக்கொடுமை ஆகியவை அம்பேத்கரின் சிந்தனையை இடற வர்ணபேதத்தை ஒழிக்க முடியாது வளர்க்கும் மதம் தேவையில்லை என்று முடிவெடுத்து இந்து மதத்தை துறக்கிறார்.1956 அக்டோபர் 15ல் அண்ணல் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தை தழுவுகிறார்.
இத்திரைப்படத்தில் அரசியல் மாமேதையின் போராட்ட வாழ்வை மட்டுமின்றி அவரது சொந்த வாழ்வின் சுகதுக்கங்களும் அழகோவியமாக பதிவு செய்யப்பட்டிருப்பது படைப்புக்கு மெருகேற்றுகிறது. இளவயதில் திருமணம், தந்தையார் மரணம் மகன் இறப்பது, மணைவி உயிர் துறப்பது போன்ற வாழ்வின் முக்கிய தருணங்களில் மழை பெய்வது கவிதைத்தனமையை அளிக்கிறது.
ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் மெனக்கெடலும் அம்பேத்கர் மீதான நேசமும் பளிச்சிடுகிறது.
அம்பேத்கரை நம் கண்முன் நிறைத்திருப்பதில் மலையாள நடிகர் மம்முட்டி ஆச்சர்யமேற்படுத்துகிறார். மம்முட்டியின் ஆளுமை எங்கும் வெளிப்படாமல் அம்பேத்கரின் ஆளுமையாக உருமாற்றம் பெற்றிருப்பதில் இந்தியாவின் தலை சிறந்த நடிகராக உச்சம் தொடுகிறார்.அந்த கலைஞனுக்கு வாழ்நாள் பெருமையாக இத்திரைப்படம் திகழும் என்பதில் ஐயமில்லை.
இறுதியாக....
போராட்டங்களாலும். புரட்சியாலும் மட்டுமே விடுதலை சாத்தியப்பட்டிருக்கிறது என்பதற்க்கான வரலாற்று சான்றுதான் அம்பேத்கர்.
திரையரங்கைவிட்டு வெளியே வரும்போது இதே தேசத்தில் தான் "அம்பேத்கர் ஒழிக" என்ற குரலும் ஓங்கி ஒலித்திருக்கிறது என்ற வேதனை நமக்கு எழுகிறது.அதற்கு சுயநல அரசியலே அன்றும் அடிப்படையாக இருந்திருக்கிறது...
வெளியே சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பதாகைகளில் தங்களது தலைக்குப்பின்னால் அம்பேத்கர் உருவத்தை பொறித்திருக்கும் தலைவர்களாவது இந்த திரைப்படத்தை பள்ளி கல்லூரிகளில் இலவசமாக திரையிட ஏற்பாடு செய்யலாமே? என்று நமக்கு தோன்றியது.யாரும் செய்யவில்லை.அரசு ஒரு நாளும் உண்மையை பரவவிடாது.புரட்சிக்கான விதை மண்ணில் விழுந்துவிட அனுமதிக்காது.சுயநல அரசியல்வாதிகளும் மக்கள் விழிப்புணர்வு பெறுவதை விரும்ப மாட்டார்கள் எனவே எத்தகைய வரலாறும் மக்களுக்கு பயன்படப்போவதில்லை....
ஏனெனில் இந்தியா ஜனநாயக நாடு...!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக