ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மக்கள் மன்றத்தின் முன் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக, '' விடுதலைப் புலிகள் மீது தடை'' என்ற கவசத்தை மத்தியஅரசு பயன்படுத்துகிறது என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கூறினார்.
திருச்சியில் ஓவியர் புகழேந்தியின் "போர்முகங்கள் ஓவியக் கண்காட்சியை வைகோ பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்
ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் உயிரோட்டம் மிகுந்தவை. அவர் ஈழம் சென்று பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து அங்கு இருந்த நிலைமைகளை உயிர்ச் சித்திரங்களாகத் தீட்டியுள்ளார். இந்த ஓவியங்கள் தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரிடம் தமிழ் ஈழ ஆதரவை ஏற்படுத்தும். இந்த ஓவியங்கள் இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றத்தை மனித உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன. சர்வதேச அனாதைகளாக ஈழத் தமிழர்கள் உள்ளனர். உலகில் வேறு எந்த இனத்திற்கும் இப்படி ஒருநிலை ஏற்பட்டதில்லை. தமிழர்களின் பூர்வீகப் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றப்படுகின்றனர். மீதமுள்ள தமிழர்களையும் அழித்துவிட்டு,இலங்கையை சிங்களர்களின் பூமியாக மாற்ற ராஜபக்சே திட்டமிடுகிறார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என்று டெல்லிஉயர் நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் நான் வாதாடினேன். அப்போது, "தமிழர்கள் சர்வதேச அனாதைகளாக ஆகிவிட்டனர். விடுதலைப்புலிகள் மீதான தடையைக் காரணம் காட்டி இலங்கையிலிருந்து வரும் அகதிகளை முகாமில்அடைக்கின்றனர்; நாடு கடத்துகின்றனர்'' என வாதிட்டேன்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு தயாரித்து, அரசிதழில் வெளியிட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. "தனி ஈழம் அமைக்க விடுதலைப் புலிகள் போராடிவருகின்றனர். தமிழ் ஈழத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டை விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். இவர்கள் மீதான தடையை நீக்கினால், நம் நாட்டின் பாதுகாப்பிற்கு கேடாக அமையும்'' என்று கூறப்பட்டுள்ளது
தமிழ் ஈழம் என்று இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளைத்தான் விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். எந்த இடத்திலும் தமிழகத்தின் ஒரு பகுதியைக் கூட ஈழம் என்று அவர்கள் கூறவில்லை. அப்படிபிரகடனப்படுத்தியுள்ளதைக் காண்பிக்க முடியுமா?
மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மக்கள் மன்றத்தின் முன் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் மீது தடை என்ற கவசத்தைப் பயன்படுத்துகிறார்கள் இதற்குக் கருணாநிதியும் உடந்தையாக உள்ளார் என்று வைகோ கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக