அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மூவருக்கு, ஆளுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொடுக்க வேண்டும்' என, அலகாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மூன்றில் ஒரு பங்கு இந்துக்களுக்கும், இன்னொரு பங்கு முஸ்லிம்களுக்கு, மூன்றாவது பங்கு, "நிர்மோகி அகாரா' அமைப்புக்கு வழங்க வேண்டும். பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்களில் துவக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை, நாடே அதிக எதிர்பார்ப்புகளுடனும், பரபரப்புடனும் எதிர்பார்த்தது. நாட்டின் ஒட்டுமொத்த பார்வையும், நேற்று லக்னோவை நோக்கியே இருந்தது. நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால் மற்றும் சிப்காட் உல்லா கான் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. நேற்று மதியம் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சார்பாக ஆஜரான வக்கீல்கள் 20க்கும் மேற்பட்டோர், கோர்ட்டிலிருந்து வெளியே வந்து லக்னோ கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மீடியா சென்டரில் பேட்டியளித்தனர். பரபரப்பும், பதட்டமாக இருந்த சூழ்நிலையில் வக்கீல்கள் தாங்கள் எடுத்துரைத்த வாதங்களை விளக்கி, அதற்கு நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை கூறும்போதே, தீர்ப்பின் சாராம்சம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனி தீர்ப்பு வெளியிட்ட போதும், நீதிபதிகள் சிப்காட் உல்லா கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் கூறிய தீர்ப்பில், "இன்று ராமர் சிலை வழிபடும் இடம் இந்துக்களுக்கு சொந்தம்' என்று குறிப்பிட்டனர்.
தீர்ப்பின் விபரம் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தை, மூன்று பாகமாக பிரித்து, ஒரு பாகத்தை, "நிர்மோகி அகாரா' என்ற அயோத்தியில் நீண்டகாலமாக உள்ள சாமியார்கள் அடங்கிய குழுவுக்கும், இன்னொரு பங்கை சன்னி வக்பு வாரியத்திற்கும் (முஸ்லிம்), மற்றொரு பங்கை, "ராம் லாலா விராஜ்மான்' என்ற ராமர் சிலை வழிபடும் இடத்தை வைத்திருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். இடத்தை பிரித்து அளிக்கும்போது, தற்போது ராமர் சிலை உள்ள இடத்தையே இந்துக்களுக்கு ஒதுக்கவேண்டும். இடத்தை பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்கள் கழித்தே துவக்க வேண்டும். அதுவரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும். பிரச்னைக்குரிய இடம், ராமர் பிறந்த ஜென்மபூமி என்று நீதிபதிகள் மூவரும் தெரிவித்துள்ளனர்.
நிர்மோகி அகாரா: ராமர் பிறந்த இடமான அயோத்தியில், பாரம்பரியமான உரிமையை நிலைநாட்டும் வகையில், அங்கு தங்கி வழிபடும் சாமியார்களின் அமைப்பு தான் நிர்மோகி அகாரா. இங்குள்ள சாமியார்கள் அன்றாடம் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அயோத்தியில் உள்ள பழைமையான அமைப்பு இது. 1885ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று, இந்த அமைப்பு, பைசாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 1959ம் ஆண்டில் இந்த அமைப்பு, சர்ச்சைக்குரிய இடம் தங்களுடையது என்று கோரியது. நேற்றைய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தின் மூன்றில் ஒரு பங்கு நிர்மோகி அகாராவுக்கு சொந்தம் என்ற தீர்ப்பால், இந்த அமைப்பின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.
ராம் லாலா: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், 1949ல் ராமர் சிலையை வைத்த அமைப்பு தான் ராம் லாலா விராஜ்மன். ராமர் பிறந்த இடத்தில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக்கூடாது என்ற தீர்ப்பால், அந்த சிலைகள் அமைந்துள்ள இடம், மசூதி குவிமாடம் இருந்த இடம் உட்பட மூன்றில் ஒரு பங்கு இடம் இந்த அமைப்புக்கு வழங்கி அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது.
நீதிபதிகளின் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதே சமயம் சன்னி வக்பு போர்டும், இந்த வழக்கில் தொடர்புடைய இந்துமகா சபையும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்தன.
இந்த தீர்ப்பு குறித்து சன்னி வக்பு வாரியத்தின் வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி கூறியதாவது : "அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து வழங்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம். "நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும்' என, ஐகோர்ட் தெரிவித்த பார்முலாவை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக் கொள்ளாது. ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். நிலம் விஷயத்தில் சரணடைந்து விட மாட்டோம். அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வந்தால், அதற்கும் சன்னி வக்பு வாரியம் தயாராக உள்ளது. பேச்சுவார்த்தைக்கு யாராவது முன்மொழிந்தால், அது நடக்கும். அடுத்த 90 நாட்களுக்கு தற்போதைய நிலை தொடரும் என்பதால், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய சன்னி வக்பு வாரியத்திற்கு கால அவகாசம் உள்ளது.
அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் கூட்டத்திற்குப் பின், அப்பீல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு செயல்பட மாட்டோம். மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடில்லை. பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய தீர்ப்பு எங்களுக்கு அதிருப்தி அளிப்பதோடு மட்டுமின்றி, முஸ்லிம்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களுக்கு எதிராகவும் உள்ளது. தற்போதைய நிலையில் இதை மட்டுமே தெரிவிக்க முடியும். தீர்ப்பை முழுமையாக படித்த பின்னரே மற்ற விவரங்களை தெரிவிப்போம். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்ல முடியும் என்பதால், மக்கள் அதிருப்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை இழக்க எந்தக் காரணமும் இல்லை. தற்போதைய பிரச்னையை யாரும் வீதிக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். நாடு முழுவதும் அமைதி பேணிக்காக்கப்படும் என, நம்புகிறேன். இவ்வாறு ஜாபர்யாப் ஜிலானி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக